டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தேசிய தலைவர் நட்டா, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து முதல்கட்ட ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுக, பாமக, த.மா.கா, ஐஜேகே, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது. பாஜக தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் சுமார் 38 கட்சிகள் பங்கேற்கின்றன.

பாஜக கூட்டணியில் உடைந்த கட்சிகளின் தலைவர்கள்:

தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்றுள்ள பெரும்பாலானவர்கள் இரண்டாக உடைந்த கட்சிகளின் தலைவர்கள் ஆவர். சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். தேசியவாத காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்.

இதேபோல், நிதிஷ்குமாரிடம் இருந்து பிரிந்து சென்ற ஜித்தன்ராம் மஞ்சி என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். லோக் ஜன சக்தி இரண்டாக உடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் இரு அணிகளும் பங்கேற்றுள்ளது.

ஓ.பி.எஸ்., டிடிவியை கண்டுகொள்ளாத பாஜக:

தமிழ்நாட்டில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி போன்றவைக்கு அழைப்பு விடுத்துள்ள பாஜக, அதிமுக ஓ.பி.எஸ். அணி, டிடிவி தினகரனின் அமமுகவை அழைக்கவில்லை.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: