வீட்டு மனை விற்பதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.5 லட்சம் நூதன மோசடி: பெண் உட்பட 3 பேருக்கு வலை

பெரம்பூர்: ஓட்டேரியில் வீட்டு மனை விற்பதாக கூறி, போலிஆவணம் மூலம் ரூ.5 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாம்பலம் பன்னீர் நகரை சேர்ந்தவர் சார்லஸ். இவர், கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் வீட்டு மனை வாங்குவதற்காக ரூ.28 லட்சம் விலை பேசியுள்ளார். பின்னர் அதற்கு முன்பணமாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் ரூ.5 லட்சத்தை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியில் வைத்து கொடுத்துள்ளார். அதை பெற்றுக் கொண்ட ஜெயந்தி, ஒரு மாதத்திற்குள் கிரையம் செய்து கொள்ளலாம், எனக் கூறி சார்லஸை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு ஜெயந்தி வீட்டின் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சார்லஸ், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று மேற்படி இடம் சம்மந்தமாக விசாரித்தபோது போலியான ஆவணத்தை காட்டி ஜெயந்தி உள்ளிட்ட சிலர் சார்லஸை ஏமாற்றியது தெரிய வந்தது.

மேலும் அந்த இடம் பாபு என்பவரின் பெயரில் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சார்லஸ் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இதுதொடர்பாக சார்லஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஓட்டேரி போலீசாருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, பெரம்பூர் ஏகாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மற்றும் பாபு ஆகிய 3 பேர் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டு மனை விற்பதாக கூறி போலி ஆவணம் மூலம் ரூ.5 லட்சம் நூதன மோசடி: பெண் உட்பட 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: