நன்றி குங்குமம் ஆன்மிகம்
எதற்கும் நாலு பேர் வேண்டும்”, “நாலு பேர் மெச்சுவது போல் நடந்து கொள்ள வேண்டும்”, “நாலு பேர் சொல்ற பேச்சைக் கேட்க வேண்டும்”, ‘‘நான்கு புறமும் பார்த்துப் பேச வேண்டும்” என்று, நான்கு என்ற எண்ணின் ஏற்றத்தை நடை முறை வாழ்க்கையில் காணலாம். அது இயல்பாக இருக்கிறது.
“தவத்திற்கு ஒருவரடி.
தமிழுக்கு இருவரடி.
சவத்துக்கு நால்வரடி”
– என்று பழைய பாடல் உண்டு.
இதனால்தான் ஒரு தமிழ் திரைப்படப் பாடலில் அந்த, “நான்கு பேருக்கு நன்றி” என்று பல்லவியினை வைத்தார்கள். முதலிலேயே சுமந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பாடல் இது. வேதங்கள் நான்கு. சதுர் மறை. இறைவனை “நால் வேதத்தில் நின்ற மறைச் சுடரே” என்பார்கள்.“அருமறை திரள் நான்கும்” என்பார் திருமங்கையாழ்வார். இதிலும் ஒரு நுட்பம். மறை ஒன்றுதான். திரள் நான்கு என்பதால், நான்கு தொகுப்பாக வியாசர் செய்தார். வியாசரின் நான்கு சீடர்களும் (பைலர், வைசம்பாயனர், ஜைமனி, சுமந்து) ஆகியோர்.
வேதத்தைப் பரப்பினர். திசைகள் எட்டு. ஆயினும் பிரதான திசை நான்கு. வடக்கு குபேரன். தெற்கே எமன். கிழக்கே இந்திரன். மேற்கே வருணன். தேவாரத்தில் நால்வர் என்று பிரதானமாகச் சொல்வார்கள். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர். தமிழர் நிலத்தை நான்கு வகையாகப் பாகுபடுத்திப் பார்த்தனர். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன அவை. இந்த நிலவுலகை நானிலம் என்பார்கள்.
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
– என்பது பரிபாடல் 13/35-37
மதுரையை நான்மாடக் கூடல் என்பார்கள் அது `நான்கு மாடக் கூடல்’ என்பதன் குறுக்கம். அக்கால நான்கு மாடக் கூடல்கள். கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என இவற்றை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். காற்று வீசும் திசை நான்காகவும், அது வீசும் வேகத்தை வைத்து எட்டு (8) ஆகவும் வகைப்படுத்தி விவரித்துள்ளனர்.
1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் காற்று
4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று.
இது தவிர, பல பிரிவுகள் இருந்தாலும் பிரதானமானது இந்த நான்கு பிரிவு. பெருமாள் நான்கு கரம் கொண்டவர். சதுர்புஜன். நான்கு திருக்கரங்களோடு காட்சி தருவார்.
வங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய்இழையார் சென்றுஇறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
இதில் பெருமாளை ‘‘ஈரிரண்டு மால்வரைதோள்’’ என்று நான்கு திருக்கரங்கள் கொண்டவராகக் குறிப்பிடுகின்றார் ஆண்டாள்.
இறைவியின் திருவடிகள் இரண்டு.
இரண்டு திருவடிகளே நமக்குச் சரண். அரண். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்களையும் படித்தவர்களை “சதுர்வேதி” என்றும் சொல்வார்கள். அக்காலத்தில் இவர்களுக்கு நிலம் மானியமாக வழங்கப்பட்டது. அதற்கான சாசனங் களில் இவை “சதுர்வேதி மங்கலம்’’ என்று குறிக்கப்பட்டன.
(பிராமணர்களுக்கு வேதம் ஓதும் செயலை இடையூறின்றி செய்து வர தானமாக வழங்கப்பட்ட நிலம் பிரமதேயம். கோயில் காரியங்கள் சிறப்பாக தொடர்ந்து நடைபெற கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலம் தேவதேயம்)நான்கடியில் உள்ள பாடலுக்கு “வெண்பா’’ என்று பெயர். இரண்டடியிலும் வெண்பா உண்டு, அதற்கு “குறள் வெண்பா’’ என்று பெயர். திருக்குறளின் முதல் அடி நான்கு சீர்களில் இருக்கும். நான்கு அல்லது நான்கின் மடங்கு என்கிற எண்ணிக்கை ஆன்மிகத்தில் மிகவும் உயர்வானது. நான்கு பாடல்கள், 40 பாடல்கள், 400 பாடல்கள், 4000 பாடல்கள் என்று செய்வார்கள்.
வைணவத்தில் சது: ஸ்லோகீ
– என்ற பிரசித்தமான நான்கு ஸ்லோகங்கள் உண்டு.பிராட்டியின் பெருமைகளை சொல்லும் இந்த நான்கு ஸ்லோகங்களை ஸ்ரீஆளவந்தார் அருளிச்செய்தார். துளசிதாசர், அனுமன் மீது பாடிய அனுமன் சாலிசா 40 பாடல்களை உடையது. இன்றும் தினசரி இதனை பாராயணம் செய்பவர்கள் உண்டு. நாற்பது பாடல்களை உடைய நூல்கள். இனியவை நாற்பது, இன்னா நாற்பது, என நானூறு பாடல்களை உடைய பல நூல்கள் தமிழில் உண்டு.
அகநானூறு, புறநானூறு, பழமொழி நானூறு, நாலடியார் என வைணவர்கள் கொண்டாடும் நாலாயிர திவ்ய பிரபந்தம் 4000 பாடல்களை உடையது. மந்திரங்கள் ஓர் எழுத்து ஏகாக்ஷரி. இரண்டெழுத்து துவேயக்ஷரி. நான்கெழுத்து சதுராட்க்ஷரி. ஐந்து எழுத்து பஞ்சாக்ஷரி. ஆறெழுத்து சடாக்ஷரி. 8 எழுத்து அஷ்டாக்ஷரீ.பூவகைகளைப் பிற்காலத்தவர் கோட்டுப்பூ, கொடிப்பூ. நிலப்பூ, நீர்ப்பூ என நான்கு வகைப்படுத்தினர். இந்த நான்கு மலர்களைத் தேர்ந்ததில் மற்றொரு தேர்வும் அடங்கியுள்ளது. அது நிறத்தேர்வு. நிறத்தால், குறிஞ்சி – செம்மை (ஐந்து வண்ணங்களில் ஒன்று முல்லை – வெண்மை, மருதம் – பொன்மை, நெய்தல்- நீலம்) மலர்களில் இந்த நான்கு நிறங்களே மூலங்கள். பிறவெல்லாம் இவற்றின் திரிபுகளும் கலப்புகளுமேயாகும். இவ்வகையில் நானில – உலக – மலர்களின் நிறங்களையெல்லாம் அடக்கிய தேர்வாக இந்த நான்கு மலர்த் தேர்வு அமைந்துள்ளது.
யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம். இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும், குண நலன்களும் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.கிருதயுகம் – அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம். திரேதாயுகம் – நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம். ராமர், திரேதாயுகத்தில் பிறந்தார் எனப்படுகிறது.
துவாபரயுகம் – சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். கிருஷ்ணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபரயுகத்தில் பிறந்தவர்கள் எனப்படுகிறது. கலியுகம் – நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம்.
ராமாயணத்தில், தசரதனுக்குப் பிறந்த பிள்ளைகள் நான்கு. ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன். சதுரங்கம் என்று ஒரு விளையாட்டு உண்டு. அந்த விளையாட்டு போர் புரிவதைப் போல இருக்கும். அதில் உள்ள சேனைகள் சதுரங்கசேனை என்றார்கள். நால் வகைப்படை என்கின்ற சொல்லாட்சி தமிழகத்தில் உண்டு. தேர்ப் படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. படைப்புக் கடவுளான பிரம்மாவை நான்முகன் என்று சொல்வார்கள்.
அவருக்கு, ஒரு திசைக்கு ஒரு முகமாக நான்கு முகங்கள் உள்ளது. எனவே திசைமுகன் என்றும் சொல்வார்கள். அதேபோல, அவருடைய மானசபுத்திரர்கள் நான்கு பேர், சனக், சனத், சனதன் மற்றும் சனந்தன் என்பார்கள். பொதுவாக நாம் இங்கு பஞ்சபூதங்கள் என்று சொல்லுகின்றோம் ஆனால் மேலைநாட்டில் நிலம், நீர், தீ, காற்று என்று நான்கை மட்டும் சொல்லும் வழக்கம் உண்டு. அக்னியின் நாலு வடிவங்கள் கம்பீரா, யமலா, மஹதி, பஞ்சமீ. ஒருவரால் வெல்ல முடியாத நான்கு விஷயங்கள் தூக்கம், ஆசை, தீ, குடித்தல் இதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு.
நித்ரா: ஸ்வப்ன: ஸ்த்ரீ காம அக்னி இந்தன சுறாபாண –
என்ற ஸ்லோகத்தில் இந்த விவரம் வரும். கனவு காண்பதால் நம்முடைய தூக்கம் நிறைவேறாது. பெண்களுக்கு ஆசை நிறைவேறாது. எவ்வளவுதான் விறகு வைத்தாலும் தீயை அது நிறைவு செய்யாது. எவ்வளவு குடித்தாலும் ஒரு குடிகாரனுக்கு அந்த குடி நிறைவைத் தராது.
மனிதன் சாஸ்திரப்பபடி, அடைய வேண்டிய விஷயங்கள் நான்கு. தர்ம, அர்த்த, காம, மோட்சம். (அறம், பொருள், இன்பம், வீடு பேறு) ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கு கைக் கொள்ளப்படும் உபாயங்கள் நான்கு என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன. சாம, பேத, தான, தண்டம் என்று இவற்றைச் சொல்வார்கள்.
சாம – சமாதான வழி
தான – பொருள் கொடுத்து வாங்குதல்
பேத – பகையாளிக்குடியை உறவாடிக்கெடுத்தல்
தண்ட – போர், வீரம், ஆயுதம்
சாம, பேத, தானம் என்பது சமரசம் பேசுவதற்கான முதல் மூன்று வழிகளும் அடைபடும்போது, தண்டத்தை தூக்குவது என்று பொருள். கொஞ்சம் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அடி உதவுவதுபோல அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான். தமிழ்ப்படி இதனை ஒரே சொற்றொடராகக் கருதினால் இதன் பொருள் மாறும்: சாமம் – நேரக்கணக்கு, பேதம் – வித்தியாசப்பட்டால் அல்லது தவறினால், தானம் – கொடை, தண்டம் – வீண்
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
நேரம் தவறினால் கொடை வீண். எனவே உதவியை நேரத்தே செய்துவிட வேண்டும். நமக்கு வழிகாட்டி நால்வர், அம்மா, அப்பா, குரு, தெய்வம். மாத்ரு தேவோ பவ; பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ:
– என்று சற்று மாறி வேத வாக்கியம் இருக்கும்.
கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Kumbh Mela) இந்து சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உச்சைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும். பெண்களுக்குப் பண்புகளாகச் சொல்லப்பட்டது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஒவ்வொரு மனிதனும் பிறந்தது முதல் இறக்கும் வரை நான்கு நிலைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்.
படித்தல், வேலை செய்தல், திருமணம் செய்து கொண்டு வாழ்தல், குடும்பத்தில் மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விலகி இருத்தல், உலக வாழ்க்கையின் பல்வேறு கட்டுக்களில் இருந்து விடுபட முயற்சி செய்தல் என்று இதனைச் சொல்லலாம்.
வேதத்தில் நான்கு மகாவாக்கியங்கள் உண்டு. அந்த மகாவாக்கியங்கள் பின்வருமாறு:
1. பிரக்ஞானம் பிரம்ம – ‘‘பிரக்ஞையே (அறிவுணர்வே) பிரம்மன்’’ (ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம்)
2. அயம் ஆத்மா பிரம்ம – ‘‘இந்த ஆத்மா பிரம்மன்’’ (அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம்)
3. தத் த்வம் அஸி – ‘‘அது (பிரம்மம்) நீ’’ (சாம வேதத்தின் சாந்தோக்கிய உபநிடதம்)
4. அஹம் பிரம்மாஸ்மி – ‘‘நான் பிரம்மன்’’ (யஜுர் வேதத்தின் பிரகதாரண்யக உபநிடதம்)
இப்படி நான்கின் சிறப்பை நாளெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்.
நிறைவாக ‘‘நான் நாலு தருவேன், நீ மூன்று தா’’ என்று விநாயகரோடு ஒப்
பந்தம் போட்ட ஔவையார் பாடலோடு முடிப்போம்.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
இப்பாடலைத் தினமும் நான்கு முறையாவது சொல்ல வேண்டும். இப்படி நான்கின் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்
The post நால் வேதத்தில் நின்ற மறைச் சுடரே! appeared first on Dinakaran.