வழிபாட்டிலும் வரம்பு மீறல் கூடாது

அம்ர் பின் ஆஸ்(ரலி) மாபெரும் நபித்தோழர்.இவருக்கு ஓர் அன்புமகன். பெயர் அப்துல்லாஹ்.
அப்துல்லாஹ் இறைவழிபாடுகளில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வந்தார். ஆர்வம் என்றால் அப்படி இப்படி அல்ல,‘வாழ்நாள் என இருப்பதே இறைவனை வழிபடுவதற்கு மட்டும்தான்’ என்று
கருதிவிட்டார்.ஒவ்வொரு நாளும் பகல் முழுக்க நோன்பு நோற்பார். இரவு முழுக்க நின்று வழிபடுவார். குர்ஆன் ஓதுவார். உரிய ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே என்று யார் சொன்னாலும் கேட்க மாட்டார். இந்த நிலைமையில் தம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார் அமர் பின் ஆஸ்.நல்ல குடும்பப் பாரம்பரியமுள்ள பெண்ணாகப் பார்த்து மணமுடித்துவைத்தார். திருமணம் முடிந்த பிறகாவது மகனின் வழிபாடுகள் கொஞ்சம் குறையுமா என்று பார்த்தார்.

ஊஹும்.. மணவிழா முடிந்து சில மாதங்கள் கழித்து அப்துல்லாஹ்வைப் பார்க்க வந்தவர், மருமகளின் முகம் வாடியிருப்பதைக் கண்டார்.மகனைப்பற்றி விசாரித்தார்.“உங்கள் மகன் மிகச் சிறந்தவர்தான். அவரைப்போல் ஒரு வணக்கசாலியைப் பார்க்கவே முடியாது. ஆனால்…”
“சொல்லு மகளே”கண்களில் நீர் மல்க கூறினார்: “உங்கள் மகனிடம் நான் வந்து சேர்ந்த நாள் முதலாய் அவர் என்னைப் படுக்கைக்கு அழைக்கவும் இல்லை. எனக்காகத் திரைச்சீலையை அவர் இழுத்து மூடவும் இல்லை.”அம்ர் பின் ஆஸ் நேரே இறைத்தூதரிடம் சென்று மகனைப்பற்றி முறையிட்டார்.

“அப்துல்லாஹ்விடம் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்றார் நபிகளார்(ஸல்)அப்துல்லாஹ் வந்தார்.“நீ நாள்தோறும் நோன்பு நோற்பதாக உன் தந்தை
சொன்னாரே?”“ஆம் இறைத்தூதர் அவர்களே.”“அப்படிச் செய்ய வேண்டாம். மாதம் மூன்று நாள் நோன்பு வை. அது போதும்.”“இறைத்தூதர் அவர்களே, நான் இளைஞன். அதைவிட அதிகமாக என்னால் நோன்பு நோற்க முடியும்” என்றார் அப்துல்லாஹ்.“சரி, அதைவிடவும் அதிகமாக நோன்பு வைக்க முடியும் எனில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு வை. இது தாவூத் நபி அவர்களின் நோன்பாகும். இதைவிடச் சிறந்த நோன்பு இல்லை” என்று அறிவுறுத்தினார்.
வழிபாடுகள் நல்லவைதாம். ஆனால் அதிலும் வரம்புமீறலோ தீவிரப்போக்கோ கூடாது என அப்துல்லாஹ்வுக்கு அழகாக உணர்த்தினார் நபிகளார்.

– சிராஜுல் ஹஸன்.

இந்த வாரச் சிந்தனை

“நிச்சயமாக ஒவ்வொரு நன்மைக்கும் கைம்மாறாக அதைப்போன்ற பத்து
நன்மைகள் உண்டு.” நபிமொழி.

The post வழிபாட்டிலும் வரம்பு மீறல் கூடாது appeared first on Dinakaran.

Related Stories: