தக்காளிக்கு வந்த காலம்…ஆடி மாத சீரிலும் ஒரு தட்டு!

‘காலம், நேரம் எல்லாம் சரியாக அமைந்தால், வாழ்க்கையில் ஓஹோனு போய்விடுவார்கள் என்பார்கள்’. இந்த காலம் இப்போ தக்காளிக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறி உள்ளது. ஓட்டல், வீடு, சுப நிகழ்ச்சிகள் என எது எடுத்தாலும், இன்றைக்கு காஸ்ட்லி மெட்டீரியலாக ‘தக்காளி’ உள்ளது. தக்காளி பயிரிட்டுள்ள நிலத்துக்கு பல லட்சங்கள் செலவு செய்து, வேலி அமைப்பது தொடங்கி, கடைகளில் பவுன்சிலர்கள் வைத்து வியாபாரம் செய்வது, சமையலில் 2 தக்காளி கூட சேர்த்ததால் சண்டை ஏற்பட்டு குடும்பம் பிரிந்தது, விலையேற்றத்தால் மும்பை விவசாயி கோடீஸ்வரரானது என பல சுவாரஸ்ய சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி உள்ளது. அதன்படி, தற்போது ஆடி மாத சீர்வரிசையிலும் தக்காளிக்கு ஒரு தட்டு இடம் கிடைத்து உள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், காமாட்சியம்மன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யா.

இவருக்கும், பள்ளிகொண்டாவை சேர்ந்த லீலாபிரியா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணமான முதலாவது ஆடி மாதத்தையொட்டி பெண்ணின் வீட்டார் ஆடி மாத சீர்வரிசை வைத்து மகளையும், மருமகனையும், தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி நாளை ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் லீலாபிரியாவின் பெற்றோர் 25 வகையான பொருட்களை சீர்வரிசையாக வைத்தனர். இதில் திராட்சை, தேங்காய், துணி மணிகள், ஆப்பிள், அன்னாசிப்பழம், மாம்பழம், வாழைப்பழம், தக்காளி உள்ளிட்ட பொருட்களை வைத்து பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். உயர்ரக பழங்களுடன் சீர்வரிசை தட்டில் வைக்கப்படும் அளவுக்கு தக்காளி சீர்வரிசை தட்டில் இடம் பெற்றிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post தக்காளிக்கு வந்த காலம்…ஆடி மாத சீரிலும் ஒரு தட்டு! appeared first on Dinakaran.

Related Stories: