நன்மை தரும் நந்தி வழிபாடு..!!

பொதுவாக, சிவலாயத்தில் சிவலிங்கமும் நந்தியும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தருவார்கள். ஓர் ஆலயத்தில் ஏழு நந்திகள் இருக்குமானால் அந்த ஆலயம் மிகச் சிறப்புடையது. ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில்களில் “இந்திர நந்தி, பிரம்ம நந்தி, வேத நந்தி, விஷ்ணு நந்தி, தர்ம நந்தி’ என ஐந்து நந்திகளை தரிசிக்கலாம்.

ஒரு சமயம், இந்திரன், நந்தி ரூபத்தில் சிவபெருமானுக்கு வாகனமாக இருந்தார். அவரே இந்திர நந்தி. இந்திரனின் போகங்களுக்கு அதிபதியாகத் திகழ்வதால் இவர் “போகநந்தி’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மன் ஒருமுறை, நந்தியாகி, சிவனைத் தாங்கினார். அதனால் அவர், ” பிரம்ம நந்தி’ எனப்பட்டார். பிரம்மன் வேத சொரூபி ஆனதால் இவரே “வேத நந்தி’யும் ஆனார்.

முப்புரத்தினை எரிப்பதற்காக சிவபெருமான், தேரில் ஏறியதும் தன்னால் தான் திரிபுரம் அழியப்போகிறது என்று கர்வம் கொண்டது தேர். இதனை அறிந்த சிவபெருமான் தன் கட்டை விரலை தேரில் ஊன்றினார். தேர் உடைந்தது. அப்போது, மஹாவிஷ்ணு நந்தியாக உருவம் எடுத்து, சிவபெருமானைத் தாங்கினார். அவர்தான், “மால்விடை’ என்று சொல்லக்கூடிய “விஷ்ணுநந்தி’ ஆவார்.

மகாபிரளய காலத்தில் தர்மதேவதை நந்தியாக மாறி சிவபெருமானைத் தாங்கியது. அதுதான் “தர்மவிடை’ எனப்படும் “தர்மநந்தி’! கோயில் பிரதான வாயிலில் வலது பக்கம் பார்த்தபடி அதிகார நந்தி இருப்பார். பின்புறம் ரிஷப நந்தி இருக்கும். மூன்று நந்திகள் உள்ள ஆலயத்தில் இறைவனிடமிருந்து மூன்றாவது கொடி மரத்திற்கு அருகில் உள்ள நந்தி “ஆன்ம நந்தி’ எனப்படும். இந்த நந்தியை “சிலாதி நந்தி’ என்றும் சொல்வர்.

கயிலைக் காப்பவர் அதிகார நந்தி! சிவன் தாண்டவம் ஆடும்பொழுது மத்தளம் இசைப்பார். சிவபெருமானின் கட்டளையை நிறைவேற்ற சேனைத் தலைவராகவும் இருப்பவர். நந்தியை நாம் கோயிலில் வழிபடுகிறோம். தன் நாக்கை வளைத்து மூக்கை அடைத்திருக்கும். இது மூச்சடக்கும் ஒரு நிலையாகும். மூச்சடக்குவது யோகப் பயிற்சிகளில் ஒன்று. மூச்சடக்கும் பயிற்சியில் பொறுமை மேலோங்கும். ஆயுள் விருத்தியாகும், உடல்நலம் வளம் பெறும்.

பிரதோஷ காலத்தில் நந்தி மிகவும் போற்றப்படுகிறார். நந்தியை தினமும் வணங்குபவர்களுக்கு ஞானம் கைகூடும். குலம் செழிக்கும். சிறப்பான வாழ்வு அமையும் என்று வேத நூல்கள் சொல்கின்றன.

The post நன்மை தரும் நந்தி வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: