உலகத்தரத்தில் ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

 

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவரான மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவில் அனைத்து அரசியல் தலைவர்களாலும் சிறந்த ராஜதந்திரி என போற்றப்பட்டவர். நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. எழுத்து, பேச்சு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தனக்கு நிகர் தானே என ஒளி வீசியவர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் பெருமையை போற்றும் விதமாக, அவரின் 97வது பிறந்தநாள் விழாவில், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021, ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதையடுத்து மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.73 ஏக்கர் நிலத்தில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டிட பரப்பளவில் கீழ்தளத்துடன் கூடிய 7 தளங்களுடன், அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

கலைநயத்துடன் சர்வதேச தரம்
ரூ.215 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் மிக நுணுக்கமாகவும், கலைநயத்துடனும், அனைவரும் வியக்கும் வகையிலும் பிரமாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. நூலக கட்டுமானப்பணிகளை 2022, ஜன.11ம் தேதி காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். திட்டமிட்டபடி, சுமார் ஒன்றரை ஆண்டுகளில் இந்நூலகம் அழகுற கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலகம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

இந்த திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, காலை 10 மணிக்கு விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். காலை 11.25 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன் ஆகியோர் வந்தனர். விமான நிலையத்தில் முதல்வரை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி,அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உட்பட திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து வேனில் முதல்வர் சுற்றுலா மாளிகை சென்றார். விமான நிலையத்திலிருந்து சுற்றுலா மாளிகை செல்லும் மதுரை, வடக்கு, தெற்கு, மாநகர திமுக சார்பில் 50 இடங்களில் ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை காண்பதற்காக சாலையின் இருபுறமும் பொதுமக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு முதல்வர் வந்தார். வரும் வழியில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டம் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து விருந்தினர் மாளிகையில் தங்கி முதல்வர் ஓய்வு எடுத்தார். பின்னர் அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு வந்து நூலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் நூலகத்தின் பல்வேறு தளங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு செல்கிறார். அங்கு, நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இரவு 7 மணிக்கு, மதுரை கோச்சடையில் உள்ள கருமுத்து கண்ணன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். இரவு 8.55 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கிளம்பிச் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post உலகத்தரத்தில் ரூ.215 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: