எதிர்ப்புகளை மீறி தாராவியை அதானி குழுமத்திற்கு வழங்கியது பாஜக கூட்டணி அரசு: ரூ.23,000 கோடி திட்டப்பணிகளை 7 ஆண்டுகளில் நிறைவடையும் என தகவல்

மும்பை: மும்பை தாராவி பகுதியை மேம்படுத்துவதற்கான ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டத்தை பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி அதானி நிறுவனத்துக்கு வழங்கி மராட்டிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய குடிசை பகுதியாக உள்ளது மராட்டியத்தில் உள்ள மும்பையின் தாராவி பகுதி. அந்த மாநிலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் பகுதியான தாராவியில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். முக்கிய வணிக பகுதியான தாராவியில் சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 13 ஆயிரம் சிறு தொழில்களுக்கான இடமாக அது உள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள குடிசைகளை அகற்றி குடியிருப்புகளை அமைக்க 90-களில் திட்டமிடப்பட்டது. நிதி பற்றாக்குறை மற்றும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. மேலும், நகரின் முக்கிய பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாறினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2018-ம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தாராவி மேம்பாட்டு திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

அதானி நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டது தான் காரணமாகவே அது ரத்து செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அதானி நிறுவனத்துக்கு ரூ.5,069 கோடிக்கு தாராவி மேம்பாட்டு திட்ட டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதானி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதற்கு மராட்டிய மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் டெண்டர் ஒதுக்கீட்டுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.23,000 கோடி மதிப்பிலான இந்த திட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் 7 ஆண்டுகளில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post எதிர்ப்புகளை மீறி தாராவியை அதானி குழுமத்திற்கு வழங்கியது பாஜக கூட்டணி அரசு: ரூ.23,000 கோடி திட்டப்பணிகளை 7 ஆண்டுகளில் நிறைவடையும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: