புளியந்தோப்பில் பரபரப்பு பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற கூடாது: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாதவரம்: சென்னை புளியந்தோப்பு அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பு சார்பில், பொது சிவில் சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புளியந்தோப்பு இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஷெரிப் தலைமை தாங்கினார். அப்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசுகையில், ‘‘பாஜ ஆளும் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்சின் கொள்கைகளை நிறைவேற்ற இயலாது.

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பாக அனைத்து விதமான சிக்கல்களும், பிரச்னைகளும் சமூக வலைதளங்களில் தற்போது காண முடிகிறது. எனவே இதனை கொண்டுவர கூடாது.’’ என பேசினர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post புளியந்தோப்பில் பரபரப்பு பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்ற கூடாது: இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: