வேலூர், ஜூலை. 15: காட்பாடி அடுத்த தேன்பள்ளியில் மரக்கன்றுகளை வளர்த்த அரசு நிதியுதவி பள்ளி மாணவிகளுக்கு எஸ்பி மணிவண்ணன் பாராட்டி பரிசு வழங்கினார். காட்பாடி அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் கடந்த ஆண்டு ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்றார். மரக்கன்றுகளை நன்றாக வளர்ப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி தற்போது சென்று பார்த்தபோது யுவானி, அகஷயா, சிந்திகா ஆகிய மூன்று மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி மணிவண்ணன், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் உடன் இருந்தார்.
The post மரக்கன்று வளர்த்த 3 மாணவிகளுக்கு பரிசு எஸ்பி வழங்கினார் காட்பாடி அடுத்த தேன்பள்ளி கிராமத்தில் appeared first on Dinakaran.
