பட்டா கத்தியில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் காட்பாடியில் நடுரோட்டில் துணிகரம்

வேலூர், ஜூலை 14: காட்பாடியில் நள்ளிரவு நடுரோட்டில் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் தங்களை பற்றிய தகவல்கள் வர வேண்டும். இதன்மூலம் லைக் எவ்வளவு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோளாறு இன்று இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி பெரும்பாலானோரிடம் தொற்றிக்கொண்டு உள்ளது. இதற்காக அவர்கள் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்காரணமாக இந்த செயல்பாடுகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து நிறைந்த சாலையில் நள்ளிரவு பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய பரபரப்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே கடந்த 11ம் தேதி நள்ளிரவு 3 இளைஞர்கள் பைக்கில் வந்து சாலையோரம் நிறுத்துகின்றனர். பின்னர் அந்த பைக் மீது கேக்கை வைத்து அதை பட்டா கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். மேலும் பிறந்த நாள் கொண்டாடியதாக பூவரசன் என்ற இளைஞருக்கு ஆள் உயர பூ மாலை அணிவிக்கின்றனர். அதைத்தொடர்ந்து, சரவெடிகளை கொளுத்தி நடுரோட்டில் வீசுகின்றனர். இந்த துணிகர காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இடம் எப்போதும் வாகனங்கள் நிறைந்த பரபரப்பான சாலையாகும். இந்த சாலையோரம் கையில் பட்டாசு, பட்டா கத்தியுடன் நின்று கேக் வெட்டி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவ்வழியாக பயணித்த பாதுசாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடியோவில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியைச் சேர்ந்த பூவரசன்(26), காட்பாடி அடுத்த எல்ஜி புதூர் சிவா(21) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

The post பட்டா கத்தியில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் கைது சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் காட்பாடியில் நடுரோட்டில் துணிகரம் appeared first on Dinakaran.

Related Stories: