இந்திய அளவில் விலை ஏற்றம் தமிழ்நாட்டில் 10 நாளில் தக்காளி விலை சீராகும்; அமைச்சர் பெரியகருப்பன் உறுதி

குன்றத்தூர், ஜூலை 13: இந்திய அளவில் தக்காளி விலை ஏற்றம் கண்டுள்ளது. எந்த மாநிலமும் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 10 நாட்களில் தக்காளி விலை சீராகும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகத்தை குன்றத்தூர் அடுத்த மேத்தா நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில், வங்கி திறக்கப்பட்ட மறுநாளே 62 பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு 62 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று 62 பயனாளிகளுக்கு ₹2 கோடியே 13 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான கடன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று திறக்கப்பட்ட வங்கி இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதுவும் கடனுதவி வழங்கும் அளவிற்கு வந்துள்ளது என்றால் எந்த அளவிற்கு தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று சிறப்பாக இயங்குகின்ற ஒரே வங்கி இந்த வங்கி தான். கூட்டுறவு சங்கங்களும், வங்கிகளும் சிறப்பாக செயல்படுவது தமிழகத்தில்தான் என்ற பெயர் கிடைத்துள்ளது.

தக்காளி விலை தமிழகத்தில் மட்டும் உயர்வு என்று கருத வேண்டாம். இந்திய அளவில் தக்காளி விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனை எந்த மாநில அரசும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் முயற்சி செய்திருக்கிறார். இதுபோன்று தக்காளி விலைகளை குறைக்க, வேறு எந்த மாநில அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் 10 நாட்களில் தக்காளி விலை சீராகும். இந்த நெருக்கடியை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு அக்கறை எடுத்து செய்ய வேண்டும். ஏனோ அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய அளவில் விலை ஏற்றம் தமிழ்நாட்டில் 10 நாளில் தக்காளி விலை சீராகும்; அமைச்சர் பெரியகருப்பன் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: