தமிழகத்தில் அதிமுக – பாஜ மோதல் தீவிரம் அடைகிறது அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்தே நீக்கம்: எடப்பாடி அதிரடி நடவடிக்கை

சென்னை: விழுப்புரத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அதிமுக – பாஜ மோதல் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. அந்த அறக்கட்டளையின் நிறுவனர், பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் ஹரிகிருஷ்ணன்.

இவரது தந்தை முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகத்துடன் நெருக்கமாக உள்ள முரளி (எ) ரகுராமன். இவர் அதிமுகவின் விழுப்புரம் மாவட்ட ெஜயலலிதா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். தந்தையும், மகனும் வெவ்வேறு கட்சியில் இருந்தாலும், திருமண நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், ஹரிகிருஷ்ணனின் தந்தை முரளி கவனித்து வந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்த முரளி, பாஜ தலைவர் அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார். அண்ணாமலை காலில் விழுந்து ஆசி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், விழா மேடையில் அண்ணாமலையை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஏற்கனவே அதிமுக எம்பி சி.வி.சண்முகம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி ஒருவர் அண்ணாமலையுடன் நெருக்கம் காட்டுவதை அவர் விரும்பவில்லை. இதையடுத்து, இந்த விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கும் சி.வி.சண்முகம் கொண்டு சென்றார்.

இதை தொடர்ந்து, முரளியை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கைக்கு அவப்பெயர் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் எஸ்.முரளி என்ற ரகுராமன் (விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘அதிமுகவிற்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளது. கட்சி தலைமையை (ஜெயலலிதாவை) கடுமையாக விமர்சித்த ஒருவருடன் நட்பு பாராட்டுவதும், அவர் தலைமை தாங்கிய விழாவை முன்னின்று நடத்துவதும் ஏற்புடையது அல்ல. கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு தேவை. அதனை அவர் மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமையிடமோ அல்லது மாவட்ட செயலாளரிடமோ எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

The post தமிழகத்தில் அதிமுக – பாஜ மோதல் தீவிரம் அடைகிறது அண்ணாமலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்தே நீக்கம்: எடப்பாடி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: