மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டெல்லி: மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்; மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. அதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே அதைப்பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. காவிரியில் நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம்தான் உத்தரவிட வேண்டும். 12.21 டி.எம்.சி. தண்ணீர் பெற தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ளது.

2.99 டி.எம்.சி. நீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கர்நாடகா வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை. காவிரியில் உரிய நீரை திறக்காவிட்டால் டெல்டாவில் பயிர்கள் கருகும் நிலை உள்ளது என்பதை ஒன்றிய அமைச்சரிடம் கூறினேன். காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், டெல்டாவில் உள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் எனவும் கூறினார்.

The post மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: