வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு!

புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிக்கப்படுகிறது. புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அத்துடன் இதுவரை 180-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், 13 பேரிடம் டி.என்.ஏ. பாிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டதுடன், 2 பேரிடம் குரல் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தொடக்கத்தில் 8 பேர் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வர மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்களை சோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்களுக்கு பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு 8 பேரும் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான சுபா, முத்துராமன், கிருஷ்ணன், கண்ணதாசன், ஜீவானந்தம், கணேசன், இளவரசி, ஜானகி ஆகிய 8 பேரும் நீதிபதி முன்னிலையேலே டி.என்.ஏ. பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், வழக்கறிஞர் மூலமாக எழுத்துப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். அறிவியல் பூர்வமாக சாட்சிகளை நிரூபிக்க வேண்டியுள்ளதால் டி.என்.ஏ. பரிசோதனை அவசியம் என்று சி.பி.சி.ஐ.டி. டிஎஸ்பி கூறியுள்ளார். இதையடுத்து வழக்கை 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று 8 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி அளித்தும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிப்பு நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று 8 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளது.

The post வேங்கைவயல் வழக்கில் டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேரிடம் இன்று ரத்த மாதிரி சேகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: