புதுவை முதல்வர்-ஆளுநர் இடையே அதிகார மோதல் சீர்வரிசை செய்யாததால் அண்ணன்- தங்கை பிரச்னை: காங்., தலைவர் கிண்டல்

புதுச்சேரி: சீர்வரிசை செய்யாததால் அண்ணன், தங்கை இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது என்று புதுவை முதல்வர்-ஆளுநர் இடையே அதிகார மோதல் குறித்து புதுவை காங்கிரஸ் தலைவர் கிண்டலடித்து உள்ளார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு சுதேசி மில் அருகில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் வரும் வருமானம் முதல்வர் மற்றும் கவர்னருக்கு தான் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து அரசு சார்பு நிறுவனங்களும் முதல்வர் ரங்கசாமி ஆட்சி வருவதற்கு முன் சிறப்பாக லாபத்துடன் இயங்கியது. அதன்பின், சர்க்கரை ஆலை, திருபுவனை ஸ்பின்கோ, ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகிய மில்கள் மூடப்பட்டதற்கு முதல்வர் ரங்கசாமிதான் காரணம்.

மதுபான கடைக்கு மட்டும் தங்கை (கவர்னர்) கையெழுத்து போடுகிறார். ஆனால் மற்ற கோப்புகளுக்கு கையெழுத்து போடுவதில்லை. அண்ணன் (ரங்கசாமி), தங்கைக்கு சீர்வரிசை செய்திருக்க மாட்டார். அதனால் தான் அடிக்கடி அண்ணன் தங்கைக்கு பிரச்னைக்கு ஏற்படுகிறது. தங்கைக்கு கோபம் வரவில்லை. ஆனால், மாமியார் (ஒன்றிய அரசு) வீட்டில் இருந்து கோபப்படுத்தி விடுறாங்க. என்ன பிரச்னை இருந்தாலும் முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் பயனடைவார்கள்: ஆளுநர் தமிழிசை யோசனை

புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடந்தது. இதில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், ‘மீன் தான் முட்டை இட்டு, கண்கள் மூலமாக அடைகாத்து, கண்களை வைத்தே குஞ்சு பொரித்து, கண்களை வைத்தே தன் சந்ததிகளை வளர்க்கும். அதேபோல மத்திய மாநில அரசுகள் மீனைப் போல செயல்படுகின்றன. மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய்நொடி இல்லாமல் இருக்கலாம். ராஜ் நிவாசில் மேற்கு வங்க நாள் கொண்டாடப்பட்டது. அப்போது மீன் உணவு சமைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘நாங்கள் மீன் உணவை அசைவம் என்று நினைப்பது இல்லை. சைவம் என்று தான் நினைக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்கள். அப்படி மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயனடைவார்கள் என்று நினைக்கிறேன். புதுச்சேரியில் மக்கள் நலம் சார்ந்த அத்தனை திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தபட்டு வருகிறது’ என்றார்.

The post புதுவை முதல்வர்-ஆளுநர் இடையே அதிகார மோதல் சீர்வரிசை செய்யாததால் அண்ணன்- தங்கை பிரச்னை: காங்., தலைவர் கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: