தேங்காயில் இருந்து பாரம்பரிய உருக்கெண்ணெய் தயாரிப்பு :நறுக் ஐடியாவில் நாஞ்சில் விவசாயி

கன்னியாகுமரி, நாகர்கோவில் பக்கம் விளையும் தேங்காய்களுக்கு என்றுமே மவுசுதான். தேங்காயின் உள்சத்து அளவும், தேங்காய்ப் பருப்பின் கனஅளவும் அதிகமாக இருக்கும் என்பதே நாஞ்சில் நாட்டு தேங்காயின் ஹைலைட். இதனால் உலக அளவில் நாகர்கோவில் தேங்காய் பேமஸ் ஆகியிருக்கிறது. குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடந்து வருகிறது. இதனால் தென்னை சார்ந்த தொழில்களான தேங்காய்நார்த் தொழில், தேங்காய் ஓட்டு கைவினை தொழில் போன்றவைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. அதேபோல, தேங்காய் எண்ணெய் தயாரிப்பில் பாரம்பரிய முறையான மரச்செக்கு, கல்செக்கு மூலம் எண்ணெய் தயாரிப்பும் நடந்து வருகிறது. கதம்பையைக் கொண்டு கயிறு தயாரிக்கும் ஆலைகள் இங்கு ஏராளம் இருக்கும் நிலையில் கதம்பைக் கழிவுகளை பிஸ்கட் வடிவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை காய்கறி வளர்ப்பிற்கும் மாடித்தோட்டத்திற்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் நாகர்கோவில் ஈத்தாமொழி தேங்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. குமரி மாவட்டம் எறும்புக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி மீனாட்சிசுந்தரம் தேங்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார். அவரைச் சந்தித்தபோது, தேங்காய் மதிப்புக்கூட்டல் அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

பாரம்பரிய விவசாய குடும்பம் எங்களுடையது. எம்.ஏ ஆங்கிலம் படித்திருக்கிறேன். கடந்த 1983ம் வருடம் முதல் முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபடுகிறேன். எனக்கு சொந்தமாக 8.5 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கிறது. இந்தத் தோப்பில் இருந்து மட்டும் வருடத்திற்கு 42 ஆயிரம் தேங்காய் கிடைக்கிறது. தென்னந்தோப்பிற்குள் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்திருக்கிறேன். ஒரு தேங்காய் ரூ.10 முதல் ரூ.12க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதில் விவசாயிக்கு எந்த லாபமும் கிடைப்பது இல்லை. இதனால் எனது தென்னந்தோப்பில் விளைவிக்கப்படும் தேங்காயை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்தேன். இரண்டு மாதத்திற்கு சராசரியாக 7 ஆயிரம் தேங்காய் கிடைக்கும். இந்த தேங்காய்களை உடைத்து கொப்பரை போட்டு மரச்செக்கு மூலம் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழிலை செய்கிறேன். என்னுடன் சேர்ந்து எனது மகன் சிவயோகேஷ், தேங்காய் எண்ணெய் உற்பத்தியை கவனித்து வருகிறார்.

தற்போது நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். மரச்செக்கில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.300க்கும், நல்லெண்ணெய் ரூ.400க்கும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.300க்கும், கடலை எண்ணெய் ரூ.280க்கும் விற்பனை செய்கிறோம். நமது முன்னோர்கள் தேங்காயில் இருந்து உருக்கெண்ணெய் தயாரித்து வீடுகளில் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இதனை நாமும் செய்யலாமே என தோன்றியது. அதன்படி உருக்கெண்ணெய் தயாரித்து விற்பனை செய்துவருகிறேன். மருத்துவக் குணம் கொண்ட உருக்கெண்ணெய்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

உருக்கெண்ணெய் தயாரிக்கும்போது ஒரு நேரத்திற்கு 50 தேங்காய் எடுத்துக்கொள்வோம். அதனை உடைத்து தேங்காயில் இருந்து தேங்காய்ப்பூவை தனியாக எடுத்துக்கொள்வோம். தேங்காய்ப்பூவின் எடைக்கு சமமாக தண்ணீரை சேர்த்து நன்றாக பிழிந்து, தேங்காய்ப் பாலை தயார்செய்வோம். 50 தேங்காயில் சுமார் 12.5 லிட்டர் தேங்காய்ப் பால் கிடைக்கும். அடுப்பில் ஒரு உருளியை வைத்து அதில் தேங்காய்ப் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். சுமார் 3 மணி நேரம் கடந்த பிறகு தேங்காய்ப் பாலில் இருந்த நீர் ஆவியாக சென்றுவிடும். மீதம் உள்ள பாலில் இருந்து உருக்கெண்ணெய் தனியாக பிரிந்து வரும்.

12.5 லிட்டர் தேங்காய்ப்பாலில் இருந்து 2.5 லிட்டர் உருக்கெண்ணெய் கிடைக்கும். உருக்கெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.800க்கு விற்பனை செய்கிறேன். உருக்கெண்ணெய் எடுத்த பிறகு உருளியில் கக்கன் என்ற ஒரு இனிப்பு வகை பொருள் கிடைக்கும். இந்த கக்கன் ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்கிறேன். 12.5 லிட்டர் தேங்காய்ப்பாலில் இருந்து உருக்கெண்ணெய் தயாரிக்கும்போது 2.5 கிலோ கக்கன் கிடைக்கும். தேங்காயைப் பொருத்தவரை 50 தேங்காய்க்கு சந்தை மதிப்பில் ரூ.500 முதல் ரூ.600 வரை இருக்கும். வேலைக்கூலி என மொத்தம் ரூ.1000 செலவு செய்தால் கூட உருக்கெண்ணெய், கக்கன் மூலம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும். நான் மாதத்திற்கு 40 லிட்டர் உருக்கெண்ணெய் தயாரித்து வருகிறேன். இதற்காக 1000 தேங்காய் பயன்படுத்துகிறேன். மீதமுள்ள தேங்காய்களை மரச்செக்கில் பயன்படுத்தி வருகிறேன். எனது தோட்டத்தில் உற்பத்தியாகும் அனைத்து தேங்காய்களையும் நான் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதால் அதிக லாபம் கிடைத்து வருகிறது. நானும், எனது மகனும் சேர்ந்து உற்பத்தி செய்யும் உருக்கெண்ணெய் நாகர்கோவிலில் 2, சுங்கான்கடையில் ஒன்று, குளச்சலில் 1 என 4 இயற்கை அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேரடியாக வருபவர்களுக்கும் கொடுத்து வருகிறோம்.

கடந்த 40 வருடத்திற்கு மேலாக விவசாயம் செய்து வருவதால் பல்வேறு விருதுகளும் எனக்கு கிடைத்துள்ளது. முன்பு அடர்பயிர் முறையில் வாழை சாகுபடி செய்து இருந்தேன். ஒரு இடத்தில் ஒரு வாழைக்கு பதில் 3 வாழைகள் சாகுபடி செய்து இருந்தேன். இதற்காக சிறந்த வாழை விவசாயி என்று கடந்த 2008ம் ஆண்டு விருது கிடைத்தது. இதுபோல் 2013ம் ஆண்டும், புதிய பயிர்களை, புதிய தொழில்நுட்பத்தில் பயிர் செய்ததற்காக சிறந்த விவசாயி விருது கிடத்தது. 2022ம் ஆண்டு செவ்வாழை சாகுபடி செய்தது தொடர்பாக விருது கிடைத்தது. தோட்டக் கலைத்துறை, கோவை பல்கலைக்கழக விருதுகளை நான் பெற்றுள்ளேன். தேங்காய்க்கு விலை இல்லை என விவசாயிகள் கவலைப்படுவதை விட்டுவிட்டு அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்’’ என அடித்துப்பேசுகிறார் மீனாட்சிசுந்தரம். அவரின் பேச்சு உண்மைதானே!

தொடர்புக்கு:
எஸ்.மீனாட்சிசுந்தரம்: 94438 44752.

தேங்காய்ப்பூவில் எண்ணெய்

உருக்கெண்ணெய் எடுக்க பயன்படும் தேங்காயில் இருந்தும் தேங்காய் எண்ணெய் எடுத்து தனியாக லாபம் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். இதுகுறித்து கூறும் அவர், உருக்கெண்ணெய்க்கு தேங்காய்ப் பூவில் தண்ணீர் ஊற்றி, தேங்காய்ப் பால் எடுத்தபிறகு, தேங்காய்ப் பூவை நான் உலர்ப்பானில் வைத்து காயவைப்பேன். காயவைத்த தேங்காய்ப் பூ 10 கிலோ சேர்ந்தவுடன் மீண்டும் மரச்செக்கில் அரைக்கும்போது 2 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதனை வீட்டுக்கும் பயன்படுத்தலாம் என்கிறார்.

 

The post தேங்காயில் இருந்து பாரம்பரிய உருக்கெண்ணெய் தயாரிப்பு :நறுக் ஐடியாவில் நாஞ்சில் விவசாயி appeared first on Dinakaran.

Related Stories: