27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு அசத்தல்

அமிர்தசரஸ்: தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் பைனலில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த 12ம் தேதி தொடங்கி நடந்து வரும் இத்தொடரின் முதலாவது லீக் சுற்றில் மேற்கு வங்கம், அருணாச்சல், உத்தர பிரதேசம் அணிகளை வீழ்த்திய தமிழ்நாடு அணி தனது பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. அடுத்து நடந்த 2வது லீக் சுற்றின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அணி ஒடிஷா (3-0), ஜார்க்கண்ட் (3-0), சண்டிகர் (3-0), கர்நாடகா (4-0), பஞ்சாப் (4-0) அணிகளை வீழ்த்தி 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் அரையிறுதிக்கும் முதல் அணியாக முன்னேறியது.இதைத் தொடர்ந்து, நேற்று நடந்த முதல் அரையிறுதியில் தமிழ்நாடு – ரயில்வே அணிகள் மோதின. அதில் தமிழ்நாடு 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. 3வது நிமிடத்தில் பிரியதர்ஷினி, 53வது நிமிடத்தில் இந்துமதி கதிரேசன் கோல் அடித்தனர். 47வது நிமிடத்தில் ரயில்வே வீராங்கனை சுப்ரியா ரவுத்ரே அடித்த சுயகோல் தமிழ்நாட்டின் கோல் எண்ணிக்கையை உயர்த்தியது. ரயில்வே தரப்பில் திபர்னிதா தேவ் (93வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார்.

இந்த வெற்றியின் மூலம், 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனியர் மகளிர் கால்பந்து பைனலுக்கு தமிழ்நாடு அணி முன்னேறி உள்ளது. இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (எஸ்டிஏடி) பயிற்சி பெற்றவர்கள். நடப்பு தொடரில் தமிழ்நாடு அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் பைனலுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post 27வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து: 5 ஆண்டுகளுக்கு பிறகு அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: