க.பரமத்தி அருகே பவுடர் ஏற்றுமதிக்காக கொட்டாங்குச்சி எரிப்பு

*சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் அவதி

க.பரமத்தி : க.பரமத்தி அருகே வெங்கக்கல்பட்டி, தும்பிவாடி ஆகிய இரு பகுதிகளில் இயங்கும் கொட்டாங்குச்சி எரித்து பவுடர் ஏற்றுமதி செய்து வரும் தொழில் நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.க.பரமத்தி ஒன்றியம் தும்பிவாடி மற்றும் புஞ்சைகாளக்குறிச்சி ஆகிய இரு ஊராட்சிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

தனியாருக்கு சொந்தமான நிலத்தில் தேங்காய் கொட்டாங்குச்சியை எரித்து பவுடர் ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இருவேறு இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனத்திற்காக தனியாருக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அவற்றில் கொட்டாங்குச்சிகளை நிரப்பி அவற்றை தீ வைத்து எரித்து அவற்றை பவுடராக்கி வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தேங்காய் கொட்டாங்குச்சிகளை சேகரித்து அவற்றை லாரிகள் மூலம் கொண்டு வந்து குவிக்கின்றனர். இவற்றை எரித்தால் ஏற்படும் புகை மற்றும் அதன் துகள்களால் நிலங்கள் மாசு படுவதுடன் இவற்றை சுவாசிக்கும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றது. அதோடு மனிதர்களுக்கு பல விதமான நோய்கள் ஏற்படுவதால் இதை தடுத்த நிறுத்த ஆலோசனை நடத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post க.பரமத்தி அருகே பவுடர் ஏற்றுமதிக்காக கொட்டாங்குச்சி எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: