அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் கிடைக்குமா?

*கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

*எதிர்பார்ப்பில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்

தேனி : அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் புதியதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்குவதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி தேனி மாவட்டம் அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் அரண்மனை புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு நிருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கிடும் செய்யப்பட்டுள்ளது.

அரண்மனை புதூர் வருவாய் கிராமத்தில் அரண்மனை புதூர் ஊராட்சி, கொடுவிலார்பட்டி ஊராட்சி, நாகலாபுரம் ஊராட்சி என மூன்று கிராம ஊராட்சிகள் உள்ளன. அரண்மனை புதூர் ஊராட்சியில் அரண்மனை புதூர், கோட்டைப்பட்டி, வீருசின்னம்மாள்புரம், பள்ளப்பட்டி, மரியாயிபட்டி, பாண்டியராஜபுரம், அய்யனார்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 22,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நாகலாபுரம் ஊராட்சியில் நாகலாபுரம், சிவலிங்க நாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன கிராமங்களில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கொடுவிலார்பட்டி ஊராட்சியும் உள்ளது. கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் உள்ள சுமார் 15 கிராம மக்களும் அரசின் இலவச மருத்துவ தேவைகளுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. கிராமப்புற மக்கள் பெரிய அளவிலான மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அறிமுகம் இல்லாத மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் மூலமாக முழுமையான திருப்தி அடைவதில்லை அதே சமயம் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும்போது முழுமையான திருப்தியோடு மருத்துவ சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர்.

இத்தகைய மருத்துவ சிகிச்சையானது அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் கிடைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது இப்பகுதி கிராம மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனைபுதூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஊராட்சிக்கு ஒதுக்கியிருந்த 10 சதவீத இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கப்பட்டது.

ஆனால், குடிசை மாற்று வாரிய நிர்வாகமானது ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒதுக்குவதாக கூறிய இடத்தை குடியிருப்பு பகுதி மக்களுக்கான விளையாட்டு திடல் மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஒதுக்க வேண்டி இருப்பதாக கூறி நில ஒதுக்கீட்டை தவிர்த்து விட்டது. இதனால் தற்போது ஊராட்சி நிர்வாகமானது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் தேடும் பணியில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதில் அரண்மனைபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலத்தை ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கலாம் என திட்டமிட்டு வருகிறது அதே சமயம் இந்த இடத்தினை கோட்டைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் கோட்டைப்பட்டி கிராமமா னது தேனி- கண்டமனூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரண்மனைபுதூரில் இருந்து தனியாக பிரிந்து செல்லும் பஸ் வசதி இல்லாத பகுதியில் உள்ளது. அரண்மனை புதூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்கு போக்குவரத்து வசதி என்பது பெறும் அமையும் எனவும் கணிக்கப்பட்டு வருகிறது.

அரண்மனைபுதூர் ஊராட்சியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்வி நிறுவனங்களுக்கு பின்புறம் சுமார் 60 ஏக்கர் மேய்ச்சல் தரிசு நிலம் அரண்மனை புதூர் ஊராட்சிக்கு சொந்தமாக உள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 25 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்தால் தேனியில் இருந்து கண்டமனூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் பாதையின் பிரிவில் நின்று செல்லும் வாய்ப்பு உருவாகும். இதனால் அரண்மனை புதூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து கிராமத்தினரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுமையாக பயன்படுத்தி சிகிச்சை வசதி பெறுவதற்கு வாய்ப்பு உருவாகும். அரண்மனை புதூர் ஊராட்சிக்கு 60 ஏக்கர் மேய்ச்சல் தரிசு நிலம் இருந்தாலும் அதில் வனத்துறையினரின் தலையிடும் இருந்து வருகிறது.

வனத்துறையினரின் அனுமதி கிடைக்கப்பெற்றால், விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்பணிகள் துவங்குவதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து விரைவில் அரண்மனைபுதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

The post அரண்மனைபுதூர் வருவாய் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இடம் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Related Stories: