திருப்புவனம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

*பக்ரீத் பண்டிகை வியாபாரம் களை கட்டியது

திருப்புவனம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்புவனம் சந்தையில் நேற்று ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. ஆடுகளின் வரத்து குறைவால் விலை அதிகரித்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். மாவட்டத்திலேயே ஆடு, கோழிகளுக்கு என தனியாக திருப்புவனத்தில் மட்டும்தான் சந்தை நடைபெறும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சந்தை களை கட்டும்.

பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி வர உள்ளதால் நேற்று பலரும் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்தனர். நேற்று அதிகாலை முதல் ஆடுகள் வரத்து அதிகளவு இருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, ஆந்திரா மாநில ஆடுகள் என விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுக்க ஆடுகள் அதிகளவில் வாங்குவார்கள் என்பதால் விலை அதிகரித்துள்ளது.

நேற்று 5 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையானது. ரூ.4 கோடி அளவில் வியாபாரம் நடந்துள்ளது. இதேபோல நாட்டுக்கோழிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாட்டுக்கோழி கிலோ ரூ.300 முதல் 400 வரை உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்து ஆடி மாதம் விரைவில் பிறக்க உள்ளதால், இனி தொடர்ந்து வரும் சந்தைகளில் ஆடு, கோழிகளின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்புவனம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: