பெரியபாளையம் அருகே ஆரணியாற்றின் குறுக்கே தரைபாலத்தில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை; ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தடுப்புகள் அமைக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே புதுப்பாளையம், காரணி மற்றும் மங்களம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் வாங்கவும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஆகியோர் புதுப்பாளையம் பகுதியில் ஆரணியாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து ஆரணி சென்று அங்கிருந்து கும்மிடிப்பூண்டி, கவரைபேட்டை, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கும், பெரியபாளையம் சென்று பின்னர் அங்கிருந்து திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கும் படிப்பு, வேலை, வியாபார சம்மந்தமாகவும் சென்றுவருகின்றனர்.

இந்நிலையில் தரைப்பாலத்தின் ஓரத்தில் சிலாப்புகள் உடைந்த நிலையில் பள்ளம் அபாயகரமாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் வேலை முடிந்து இரவு நேரத்தில் பாலத்தின் வழியாக வீடு திரும்பும்போது பாலத்தின் ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால் பள்ளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. எனவே புதிய பாலம் அமைக்கும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே ஆரணியாற்றின் குறுக்கே தரைபாலத்தில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: