பிளஸ் 2 மாணவியை மிரட்டி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் சிறை: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: பிளஸ்2 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பக்கத்து வீட்டு வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்ற வாலிபரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை திரும்ப கொடுப்பற்காக கடந்த 2021 நவம்பர் மாதம் சென்றுள்ளார். அப்போது, மாணவியை கத்தி முனையில் மிரட்டி தாஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், தொடர்ந்து உறவில் ஈடுபட வருமாறு மீண்டும் மாணவியை தாஸ் அழைத்துள்ளார். இந்த விஷயத்தை மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் தாய் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் தாஸை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு ெசய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி ஆஜராகி, இந்த சம்பவம் தெருவில் உள்ளவர்களுக்கு தெரிந்ததால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. தேர்வையும் எழுதவில்லை. எனது எதிர்காலமே வீணாகிவிட்டது என்று கதறி அழுதார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் தாஸுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் சாகும் வரை சிறையிலிருக்க வேண்டும். ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 7 லட்ச ரூபாய் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அபராத தொகையையும் சேர்த்து மொத்தம் 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மாணவிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post பிளஸ் 2 மாணவியை மிரட்டி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் சிறை: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: