கும்மிடிப்பூண்டி ரயில்நிலையத்தில் விரைவு ரயிலில் கடத்திய 36 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நேற்று விரைவு ரயிலில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் மார்க்கமாக சென்று வரும் ரயில்களில் கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், தேர்வழி, ரெட்டம்பேடு, பெத்தகுப்பம், புதுகும்மிடிப்பூண்டி, முத்துரெட்டிகண்டிகை, புதுப்பேட்டை, அயநல்லூர், மேல்முதலம்பேடு, ஏனாதிமேல்பாக்கம் உள்பட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பணிகள் காரணமாக சென்று வருகின்றனர். மேலும், இம்மார்க்கத்தில் ஆந்திராவில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களும் கடத்தப்படுகின்றன. இவற்றை அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், வெளிமாநில ரயில்கள் மூலம் கஞ்சா போதைபொருட்கள் மற்றும் இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கமாக சென்னை வரும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று மாலை கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு எஸ்ஐ ஜெபதாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் எஸ்ஐ ஜெபதாஸ் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக சென்னை வரும் விரைவு ரயில்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சென்னை நோக்கி வந்த சர்க்கார் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளிடம் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தி வரப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில பயணிகளின் உடைமைகளில் இருந்த 36 கிலோ எடையிலான 18 கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பொன்னேரி, மூரிசம்பேட்டையை சேர்ந்த டேவிட்ராஜ் (27), செங்குன்றம், பன்னீர்வாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (32), வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (24), பொன்னேரி, அனுப்பம்பட்டைச் சேர்ந்த சாரதி (எ) சரத் (21), பொன்னேரி, இலவம்பேட்டையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (24), சோழவரம், காந்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் நிவேதா (எ) ஷாலினி (19) ஆகிய 6 பேர் எனத் தெரியவந்தது.

மேலும், இவர்கள் ஆந்திராவில் இருந்து விரைவு ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்திவந்து, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்குப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண் ஷாலினி உள்பட 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கும்மிடிப்பூண்டி ரயில்நிலையத்தில் விரைவு ரயிலில் கடத்திய 36 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: