காசிமேடு மீன்பிடி மார்க்கெட்டில் பெரிய வகை மீன் இல்லாததால் அசைவபிரியர்கள் ஏமாற்றம்: வஞ்சிரம் 1100க்கு விற்பனை

தண்டையார்பேட்டை: மீன்பிடி தடைகாலம் முடிந்த நிலையில், காசிமேடு மீன்பிடி மார்க்கெட்டில் பெரிய வகை மீன் இல்லாததால் வியாபாரிகள், அசைவபிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்தபோதிலும் வஞ்சிரம் ஒரு கிலோ 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15ம்தேதி முதல் ஜூன் 14ம்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும். அதன்படி இந்தாண்டு தடைகாலம் முடிந்து கடந்த 15ம்தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற ஒருசில படகுகள் இன்று அதிகாலை கரைதிரும்பின. ஆனால் பல மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துகொண்டிருக்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெரிய வகை மீன்கள் கிடைக்கும் என வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர். ஆனால், மார்க்கெட்டில் சிறிய வகை மீன்களான வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி போன்ற மீன்களே விற்பனைக்கு இருந்தன. இதனால் வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டனர்.

ஒரு கிலோ வஞ்சிரம் 950 முதல் 1100 ரூபாய் வரையும், சங்கரா 300 முதல் 500 ரூபாய் வரையும், இறால் 300க்கும், பெரிய வகை இறால் 600க்கும், வவ்வால் 300 முதல் 600 ரூபாய்க்கும், கடமான் 600க்கும், பாறை 350க்கும், நெத்திலி 150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருந்தபோதிலும் சிறியவகை மீன்கள் வாங்கிச்சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற பெரும்பாலான விசைப்படகுகள் கரைக்கு திரும்ப வில்லை. அடுத்த வாரம் அதிகளவு பெரிய வகை மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

The post காசிமேடு மீன்பிடி மார்க்கெட்டில் பெரிய வகை மீன் இல்லாததால் அசைவபிரியர்கள் ஏமாற்றம்: வஞ்சிரம் 1100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: