சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம்

சிதம்பரம், ஜூன் 18: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நேற்று காலை சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. உற்சவ ஆச்சாரியார் குருமூர்த்தி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். இதை தொடர்ந்து நான்கு வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமன பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று(18ம் தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. நாளை தங்க சூரிய பிறை வாகனத்திலும், 20ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 21ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 22ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 23ம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 24ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 26ம் தேதி சூரிய உதயத்துக்கு முன், அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணியளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞான காச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 27ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவராம தீட்சிதர், துணை செயலர் சிவசங்கர தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: