செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லை, ஜூன் 17: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தில், பழமைவாய்ந்த செப்பறை அழகிய கூத்தர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிபட்டம் ரத வீதி வலம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாலையில் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4ம் திருநாளான 19ம் தேதி காலையில் அழகிய கூத்த பெருமானுக்கு திருவாதிரை அபிஷேகம் நடக்கிறது. மாலையில் ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. 20ம் தேதி மாலையில் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

22ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி அழகியகூத்தர் சிம்ம வாகனத்தில் தாமிர சபையில் இருந்து விழா மண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. அன்றிரவு 7 மணிக்கு அழகிய கூத்தருக்கு சிவப்பு சாத்தி சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 8ம் திருநாளான 23ம் தேதி காலை 10 மணிக்கு சுவாமி நடராஜருக்கு வெள்ளை சாத்தி சிறப்பு வழிபாடு, மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 24ம் தேதி நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் சுவாமி அழகிய கூத்தர் திருத்தேருக்கு எழுந்தருளலும், தொடர்ந்து 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: