இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வர் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியல் சட்ட மரபு மீறல்: வைகோ கண்டனம்

சென்னை: ‘‘இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வர் பரிந்துரையை ஏற்காமல், அதை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியல் சட்ட மரபு மீறல்’’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலமின்றி மருத்துவமனையில் உள்ளார். எனவே, அவர் வகித்து வரும் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளார். அதன்படி, மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் மாற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக முதல்வர் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால், முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார். எனவே அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியது.

The post இலாகா மாற்றம் தொடர்பாக முதல்வர் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியல் சட்ட மரபு மீறல்: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: