தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவள்ளுரில் எருமை திருவிழா: எருமைகளின் அணிவகுப்பால் விழாக்கோலம் பூண்ட ஆயலச்சேரி கிராமம்

திருவள்ளுர்: எருமை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அவற்றின் வளர்ப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மாநிலத்திலேயே முதல் முறையாக திருவள்ளுரில் எருமை திருவிழா நடைபெற்றது. சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க உறுதியாக இருப்பது. புரதம் கொழுப்பு உள்ளிட்ட சத்துகள் நிறைந்த எருமை பால் ஆகும். எருமை மாடுகள் மூலம் மொத்த தேவையில் 50 சதவீதம் பால் கிடைக்கிறது.

ஆனால் கலப்பின பசு மாடுகளின் வரத்து அதிகரிப்பால் வீடுகளில் வளர்க்கப்படும் எருமை மாடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் எருமைகளின் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக செங்குன்றத்தை அடுத்துள்ள ஆயிலச்சேரி கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலை கழகத்தின் பால் வள தொழில்நுட்ப கல்லூரி சார்பில் எருமை திருவிழா நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற அணிவகுப்பில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட எருமைகள் இடம்பெற்றன.

இவற்றில் சிறந்த 10 எருமை மாடுகள் மற்றும் 10 எருமை கன்றுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு பால்குடுவை, கொள்கலன், தாது உப்பு கலவை மற்றும் ஊட்டச்சத்து தானியங்கள் வழங்கப்பட்டன. எருமை மாடுகள் வளர்ப்பில் ஊரக பெண்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்கும் விதமாக கால்நடை வளர்ப்பு பயிற்சி மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் சுவையூட்டிய பால், இனிப்பு தயிர், பன்னீர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதே போல மாட்டுக்கு தேவையான 13 வகையான தீவன பயிர் வகைகள், மாதிரிகள், 16 வகை எருமை இனங்களின் படங்கள், நோய் தடுப்பு தொழில்நுட்பங்கள், மாடுகளை தேர்வு செய்யும் முறை பற்றிய தகவல்களும் கட்காட்சியில் இடம் பெற்றிருந்தன. பால்வள தொழிலுட்ப கல்லூரி சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கண்டு களித்துள்ளனர். எருமைகளிடம் இருந்து கிடைக்கும் பாலை தனியார் நிறுவனங்கள் மட்டுமே வாங்குவதாக கவலை தெரிவித்த விவசாயிகள் அவற்றை அரசும் செய்வதுடன் மாடுகளுக்காக மருத்துவ சேவையை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவள்ளுரில் எருமை திருவிழா: எருமைகளின் அணிவகுப்பால் விழாக்கோலம் பூண்ட ஆயலச்சேரி கிராமம் appeared first on Dinakaran.

Related Stories: