கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் 20ம்தேதி முதல் ஒரு மாதம் கையெழுத்து இயக்கம்: வைகோ அறிவிப்பு

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி, மதிமுக சார்பில் வரும் 20ம்தேதி முதல் ஒரு மாதம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்று ைவகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற மதிமுக 29வது பொதுக்குழுவில், தமிழ்நாடு கவர்னர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் கையெழுத்து இயக்கத்தினை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், இந்துத்துவா கோட்பாட்டைத் திணிக்கும் வகையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிட்டு தடுக்கும் வகையிலும் தன் மனம்போன போக்கில் கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார்.

அவரை கவர்னர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் விளக்கிச் சொல்லி, அவர்களது கையெழுத்துக்களைப் பெறும் இயக்கத்தினை மதிமுக வரும் 20ம்தேதி முதல் ஜூலை 20ம்தேதி வரை நடத்த உள்ளது. மதிமுகவின் அனைத்து நிர்வாகிகளும் மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் ஆர்வம் செலுத்தி பொதுமக்களைச் சந்தித்து அவர்களது இசைவினைப் பெற்று, கையெழுத்துப் பெற்ற கட்சி தலைமைக்கு படிவங்களை அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும் எதிராகச் செயல்படும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை, அவரது பொறுப்பிலிருந்து அகற்றுவற்காக மதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்க கோரி மதிமுக சார்பில் 20ம்தேதி முதல் ஒரு மாதம் கையெழுத்து இயக்கம்: வைகோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: