இயற்கை முறையில் செழிக்கும் மா விவசாயம்

தோப்பிலேயே நேரடி விற்பனை… ஐடி ஊழியர் அசத்தல்

நமது உடல்நலனைப் பராமரிக்க பழங்களைச் சாப்பிடுவதே சிறந்த வழி என்பார்கள். ஆனால் இப்போது பழம் சாப்பிடத்தான் அனைவருக்கும் பயம் ஏற்படுகிறது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து விளைவிப்பதாலும், ரசாயனம் தெளித்தும், கார்பைட் கல் வைத்தும் பழங்களைப் பழுக்க வைப்பதாலுமே இந்த பயம் பலரை மிரட்டி வருகிறது. இப்போது மாம்பழ சீசன் என்பதால், மார்க்கெட்டுக்கு சென்று மாம்பழம் வாங்க ஆயிரத்தெட்டு கேள்வி கேட்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு மாம்பழங்கள் விளையும் தோப்புகளுக்கு நேரடியாக சென்று வாங்கி உண்பதுதான். மாம்பழத்தோட்டங்களுக்கு நேரடியாக சென்றால், கல் வைக்காத பழங்களை வாங்கி சாப்பிடலாம். ஆனால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்காத மாம்பழம் கிடைப்பது என்பது அரிதான விஷயம்தான். இந்த கண்டிஷன்களோடு சில மாந்தோப்புகள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மாந்தோப்பு.

வத்திராயிருப்பு, மூன்று பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்ட ஒரு இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. இங்கிருந்து வீசும் காற்று கூட அவ்வளவு மகத்துவம் மிக்கதாய் இருக்கும். அருகில் சதுரகிரி மலைமேல் இருக்கும் சுந்தரமகாலிங்கத்தைப் பார்ப்பதற்காக மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். அவர்களின் உடல்நலனை சுந்தர மகாலிங்கம் காக்கிறாரோ இல்லையோ மலையில் தவழும் மூலிகையின் வாசம் கலந்த தென்றல்காற்று காப்பாற்றுகிறது. இத்தகைய அழகான மலை சுற்றி வீற்றிருக்க, 15 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது மணிகண்டனின் மாந்தோப்பு. இங்கு பாலாமணி, இமாம்பசந்த், பங்கனபள்ளி, சப்பட்டை கிளிமூக்கு, பஞ்சவர்ணம், ருமானி உள்ளிட்ட பல ரக மாம்பழங்கள் இயற்கை முறையில் விளைந்து செழித்துள்ளன. தோட்டத்தில் மாமரங்களுக்கு இயற்கை உரம் தயாரித்துக்கொண்டிருந்த மணிகண்டனை காலை வேளையில் சந்திக்க சென்றோம். சிரித்த முகத்தோடு வரவேற்று பேசத்தொடங்கினார்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் நமது பண்ணையில் இயற்கை முறையில் மா சாகுபடி செய்து வருகிறேன். மொத்தம் 15 ஏக்கர். 350க்கும் மேலான மாமரங்கள். இயற்கை சார்ந்த வாழ்வு. படித்தது பி.இ.மென்பொருள். 20 வருசங்களாக பெங்களூரில் ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணி. கடந்த 4 வருசமாக ஒர்க் ஃபிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்தே பணி செய்கிறேன். பணி நேரம் போக விவசாயம் செய்யலாமே என முடிவெடுத்தேன். எங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மா விவசாயத்தை கையில் எடுத்தேன். அதுவும் இயற்கை முறையில் தான் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம். சாப்பிடும் உணவில் நஞ்சு இருக்கக்கூடாது என சிறுவயதில் இருந்தே விருப்பம். இப்போது அப்பா பராமரித்து வந்த தோட்டத்தில் மா விவசாயம் செய்து வருகிறேன். நாங்கள் தலைமுறை தலைமுறையாகவே விவசாயக் குடும்பம்தான். தாத்தா காலத்திலயே நெல்லில் இருந்து கம்பு, சோளம் என சாகுபடி செய்து வந்தோம். இப்போது நான் மா விவசாயம் செய்கிறேன்.

எங்கள் பகுதியில் அதாவது வத்திராயிருப்பில் கான்சாபுரம், புதுப்பட்டி, மகாராஜபுரத்தை சுற்றி மட்டுமே 3100 ஏக்கரில் மா சாகுபடி நடைபெறுகிறது. எனது தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. மாந்தோப்புக்குத் தேவையான தண்ணீரை இந்த கிணற்றில் இருந்துதான் பெறுகிறேன். எங்கள் பகுதியில் பிளவக்கல் அணை இருப்பதால் நிலத்தடி நீருக்கு குறையில்லை. கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இடைப்பட்ட காலங்களில் மழை பெய்து வருவதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை இருந்து வருகிறது. பொதுவாகவே மாமரம் என்றால் தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து மருந்து தெளிப்பது வரை அனைத்திலுமே குறைபாடு இருக்கும். மாமரம் பூ பூக்கும் சமயத்தில் பூச்சி மருந்துகள் வாங்கி தெளிக்கும் பழக்கம்தான் அனைவரிடமும் இருக்கிறது. அப்படி செய்யும்போது மரம் ஒருகட்டத்திற்கு மேல் காய்ப்பை நிறுத்தி மலட்டு மரமாக போகும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பூச்சிமருந்து கலந்த மரங்களின் நஞ்சுத்தன்மையிலான விளைச்சல் தான் கிடைக்கும். இதை சாப்பிடும் அனைவருமே ஒரு கட்டத்தில் பாதிப்புக்கு உள்ளாகுவர். இதுதான் இயற்கை உரம் கொடுக்காமல் பூச்சி மருந்து தெளித்து வளர்க்கப்படும் மரங்களின் நிலை. விளைச்சல் தரும் அனைத்து மரங்களுக்குமே அடிஉரம் அவசியம். அதுவும் இயற்கை முறையிலான அடிஉரம் தான் கொடுக்க வேண்டும். குறிப்பாக மாமரத்திற்கு வருசத்திற்கு மூன்று முறை அடிஉரம் கொடுக்க வேண்டும். அதாவது, மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம், வேப்பம்புண்ணாக்கு போன்றவற்றை அடிஉரமாக கொடுக்க வேண்டும். முதலில் மரத்தைச் சுற்றி 2 அடியில் குழிவெட்டி இந்த இயற்கை தொழு உரங்களையும், பூச்சிவிரட்டி இலைகளையும் சேர்த்து உரம் வைக்க வேண்டும். அப்படி செய்யும்போதுதான் மரத்திற்கு தேவையான உயிர்ச்சத்து கிடைக்கும். உயிர்ச்சத்து மரத்திற்கு உயிர் கொடுப்பது மட்டுமில்லாமல் மகசூல் அளவையும் பெருக்கும். அதேபோல, நஞ்சில்லாத மகசூலையும் பெற்றுக்கொள்ளலாம். மரத்திற்கு தேவையான நீரில் இருந்து உரம் வரை அனைத்துமே சரியான முறையில் கொடுக்க வேண்டும்.

மாமரத்தை தாக்கும் பூச்சிகள்:

மாமரத்தைப் பொருத்தவரை வருடாந்திர மகசூல் தான். மாம்பழம் கிடைக்கும் முன்பாகவே பூப்பூக்கும் பருவத்திலேயே கெட்ட பூச்சிகள் வந்துவிடும். அதாவது, மாம்பூக்களை பூக்க விடாமல் பிஞ்சுத்தன்மை அடையும் முன்பே பூச்சிகள் வந்துவிடும். டிசம்பர் மாதத்தில் இருந்து மே வரை கிடைக்கும் இந்த மாம்பழ பருவத்திலேயே இந்த பூச்சிகளும், பூஞ்சானமும் வந்துவிடும். அதுவும் தேன்பூச்சிகள் என்ற ஒருவகை பூச்சி இருக்கிறது. மாமரத்தை காய்க்க விடாமல் செய்வதில் இதுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கெட்ட பூச்சிகள் எப்போதுமே மரத்தில் இருக்கும். பூப்பூக்கும் சமயத்தில் மட்டும் மரத்தில் இருந்து வெளிவந்து பூக்களை பூக்க விடாமல் உதிர்ந்து போக வைக்கும். பிறகு பூக்களில் உள்ள சத்துக்களை எடுத்துவிடும். இதனால், மாம்பிஞ்சுகள் அனைத்துமே காயாவதற்கு முன்பாக உதிர்ந்துவிடும். மரத்தில் பூக்களை வளரவிட்டு சரியான மகசூல் எடுப்பதற்கு சரியான முறையில் பூச்சி விரட்டி கரைசல்களை தெளிக்க வேண்டும்.

மாமரத்திற்குத் தேவையான நேரத்தில் தேவையான கரைசல் கொடுத்தால் தான் அதன் பூக்கள் உறுதிபெறும். தேன்பூச்சிகள், பூஞ்சானக்கொல்லிகள் ஆகியவற்றை விரட்டுவதற்கு முதலில் நன்மை கொடுக்கும் பூச்சிகளை உருவாக்க வேண்டும். அதாவது, பூச்சிகளில் நல்ல பூச்சிகள், கெட்ட பூச்சிகள் என இருக்கிறது. மகசூலுக்கு நன்மை அளிக்கும் பூச்சிகள் அனைத்துமே நன்மை அளிக்கும் பூச்சிகள் தான். வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் இந்த நுண்ணுயிர்களை பெருக்குவதற்கு வேப்பங்கொட்டை கரைசல், பத்திலை கசாயம் தெளிப்பது அவசியம். பத்திலை கசாயம் என்றால் நொச்சி இலை, வேப்ப இலை, புங்க இலை போன்ற கசப்புதன்மை நிறைந்த நன்மை பயக்கும் இலைகளின் மூலம் தயாரிக்கப்படுகிற கரைசல் தான். அந்த கரைசலை பூப்பூக்கும் சமயத்தில் வாரம் ஒருமுறை தெளிக்க வேண்டும். அல்லது சொட்டுநீர்ப் பாசன முறையில் நீர் கொடுக்கும் போது அந்த கரைசலை கலந்து விடலாம். இப்படி கொடுப்பதன் மூலம் திறன் மேம்பாட்டு நுண்ணுயிர்கள் அதிகரித்து பூக்களின் உறுதித்தன்மையும் சரியாக இருக்கும்.

இந்த முறையில் விவசாயம் செய்வதால் மகசூல் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் நஞ்சில்லாத மாம்பழங்களை விளைவிக்க முடிகிறது. தோராயமாக வருசத்திற்கு 10ல் இருந்து 13டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. இயற்கை முறையில் விளைவிப்பதால் இந்த பழங்களுக்கு நல்ல கிராக்கி. நாங்கள் இந்த பழங்களை வழக்கமான வியாபாரிகளுக்கு விற்பனைக்கு கொடுப்பதில்லை. இயற்கையான மாம்பழம் வேண்டும் என்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறோம். பலர் இயற்கை விவசாய மாம்பழத்திற்காக நேரடியாக எங்கள் தோப்புக்கு வருகிறார்கள். சில சூப்பர் மார்க்கெட்டுகள், பெரிய அளவிலான பழக்கடைகளின் உரிமையாளர்கள் நேரடியாக வந்து பழங்களை வாங்கிச் செல்கிறார்கள். 350 மரத்தில் இருந்து மட்டுமே 4 லட்சத்திற்கும் மேல் லாபம் பார்க்க முடிகிறது. அதுவும் தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள மாம்பழ ரகங்களை பயிரிட்டு வருவதால் மகசூல் முறையிலும், விற்பனை முறையிலும் நல்லதே நடக்கிறது’’
என்கிறார்.

தொடர்புக்கு:
மணிகண்டன்: 9886307244

The post இயற்கை முறையில் செழிக்கும் மா விவசாயம் appeared first on Dinakaran.

Related Stories: