திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்!!

சென்னை:திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ தலைவர் கே.அண்ணாமலை மீது திமுக எம்.பி., டி.ஆர் பாலு தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை எந்த சூழ்நிலையிலும் மக்கள் பணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. அவரால் மக்கள் மன்றத்தில் தேர்வாக முடியாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பல முறை தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியில் இருக்கும் என் மீது வேண்டுமென்றே அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். கடந்த 14ம் தேதி அவர் பாஜ தலைமை அலுவலகத்தில் தொலைக்காட்சிகளுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் பேட்டியளித்து திமுக பைல்ஸ் என வீடியோவை ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் எனது குடும்பத்தாரின் படங்களையும், எனது மகனான மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவுமான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடர்பாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இது தனி மனித ரகசிய உரிமைக்கு எதிரானது. தேர்தல் வேட்புமனுவில் எனது சொத்துக்கள் தொடர்பாக தெளிவாக பதிவிட்டுள்ள நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் ஆதாரமில்லாமல் அரசியல் உள்நோக்கத்துடன் அண்ணாமலை செயல்பட்டுள்ளார். நானும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் என் மகன் டி.ஆர்.பி ராஜாவும் மட்டுமே பொது வாழ்வில் உள்ளோம். என் குடும்பத்தைச் சேர்ந்தவர் வேறு ஒருவரும் பொது வாழ்க்கையில் ஈடுபடவில்லை.

நாங்கள் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில், 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்கள் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை குறித்து கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். கடந்த 1957 முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்பியாகவும், மத்திய மந்திரியாகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். என்மீது மக்களுக்கு இருக்கும் நன் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பங்கம் விளைவிக்க முயன்றுள்ளார்.

இது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன்கீழ் கிரிமினல் குற்றமாகும். எனவே, இந்த புகாரை விசாரணைக்கு எடுத்து அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி இவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன் (அவதூறு பரப்புதல்) கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம், தமிழ்நாடு பாஜ தலைவர் கே.அண்ணாமலை வருகிற ஜூலை 14ல் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின், செஷன்ஸ் நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்!! appeared first on Dinakaran.

Related Stories: