ஆனி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு!

கேரள: ஆனி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. விழா காலங்கள் தவிர்த்து மாதாந்திர பூஜைக்காகவும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு வருகிறது.

விழாக்காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போது முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் செய்யப்படும். அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயில் ஆனி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தந்திரு கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாரதனை நடத்துகிறார். நாளை முதல் 20ம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20ம் தேதி ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

The post ஆனி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு! appeared first on Dinakaran.

Related Stories: