திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 92 சவரன் நகை, ரூ.2 லட்சம் பறிமுதல்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 92 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரயில்வே நிலையம் அருகே, பிரேம்குமார் என்ற குழந்தைகள் நல மருத்துவர் வசித்து வருகிறார். இவரது வீடும் மருத்துவமனையும் ஒரே வளாகத்தில் உள்ளது. பிரேம்குமார் தனது மருத்துவமனைக்கு விடுமுறையளித்துவிட்டு, வீட்டையும், மருத்துவமனையும் பூட்டி விட்டு கடந்த மே 14ல் வெளியூர் சென்றிருந்தார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேம்குமாருக்கும் தகவல் அளித்தனர்.

நிகழ்விடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அவரது அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பிரேம்குமார் அளித்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தியது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், தடவியல் சோதனை மற்றும் மோப்பநாய் சோதனையும் நடத்தினர். இந்நிலையில், விசாரணை நடத்தி மருத்துவர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட பிரவீன்குமார் (30), செல்வகுமார் (26) ஆகியோரை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 92 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 92 சவரன் நகை, ரூ.2 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: