ராணுவ வீரர் பேசிய ஆடியோ வெளியானதால் உண்மை அம்பலம் போலீசார் விசாரணை மனைவி மீது தாக்குதல் என்று வீடியோ வெளியாகி பரபரப்பான நிலையில்

கண்ணமங்கலம், ஜீன் 14: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ராணுவ வீரர் பேசிய ஆடியோ வெளியானதால் உண்மை அம்பலமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு(41). இவர், படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருந்துள்ளார். பின்னர், அந்த கடையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படவேடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் மனைவி கீர்த்தி(28) என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை காலி செய்வது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கீர்த்திக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் உதயா, ஜீவா ஆகியோர் ராமுவை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், ராமுவுக்கு ஆதரவாக அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் கீர்த்தியை தாக்கி கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த ராமு, கீர்த்தி ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றனர். இதுகுறித்து கீர்த்தி தெரிவித்த புகாரின்பேரில் ரத்தினபுரி கிராமத்தை சேர்ந்த ராமு, அரிகரன், செல்வராஜ், ஜெயகோபி, மது ஆகியோர் மீதும், ராமு அளித்த புகாரின்பேரில் கீர்த்தி, ஜீவா, உதயா ஆகியோர் மீதும் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன். கோயில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள அவரது உறவினர் வினோத் என்பவருடன் பேசிய ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ஸ்ட்ரைக் பண்ணும்போது நமக்கு ஆட்கள் சப்ேபார்ட் வேண்டும். 10ல் இருந்து 20 பேர் வேண்டும். அதுக்கான ஆட்கள் நம்ப பசங்க ரெடியாக இருக்க வேண்டும். அதுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும். ஸ்ட்ரைக்ல பேசும்போது அரைநிர்வாணம் பண்ணி அடிச்சாங்க என்று சொல்லணும். கத்தியால குத்தியதாக எதுவும் சொல்லாத. அந்த கடையை திரும்ப கொடுத்தாலும் நமக்கு வேண்டாம், செல்வராஜ் களி திங்குற நேரம் வந்துவிட்டது. நமக்கு மானம்தான் முக்கியம். என் தங்கையை அடிக்கும்போது நான் சும்மா இருக்க முடியுமா? என்று கூற வேண்டும்.

என்னை தங்கையை அடித்தார்கள் நான் அடிக்க முடியாதா? என்று கேட்கணும். இது பெரிய பிரச்னையாக போய்கிட்டு இருக்குது. உனக்கு ஒண்ணும் தெரியல போலயே, படவேடு பயந்து போய் இருக்குது. நீ தெளிவா இரு. இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்லாத, நீ எதுவும் சொல்லாத, அழகா கொத்தாக தூக்கிட்டு போகட்டும். அதுக்கான ஏற்பாடு செய்ய வேண்டும். என்று முடியும் ஆடியோ வெளியாகி, உண்மை அம்பலமாகியுள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராணுவ வீரர் பேசிய ஆடியோ வெளியானதால் உண்மை அம்பலம் போலீசார் விசாரணை மனைவி மீது தாக்குதல் என்று வீடியோ வெளியாகி பரபரப்பான நிலையில் appeared first on Dinakaran.

Related Stories: