அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் அதிக கலைகளை கற்கலாம்: மாமல்லபுரம் கல்லூரி முதல்வர் பேட்டி

சென்னை: குறைந்த கட்டணத்தில் அதிக கலைகளை கற்றுத்தரும் போதி மரமாக மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து மாணவ, மாணவிகள் தங்கள் மேற்படிப்பை தொடங்குவதற்கு சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், கலைத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் ஆசையை நிறைவேற்ற இசை மற்றும் சிற்பக் கலையை பயில்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் இசை பண்பாட்டுத்துறையின் கீழ், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் இசை, நுண்கலை, சிற்பக் கலை உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இசைக்கு மட்டும் சென்னை, திருவையாறு, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்திலும் தற்போது விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 17ம் தேதி விண்ணப்ப பதிவு செய்வதற்கு கடைசி நாள். அதேபோல் நுண்கலை கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள்.

சிற்பக்கலை: சிற்பக்கலை கற்றுக்கொள்வதில் இளைய தலைமுறை பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள 4 ஆண்டு கால அளவிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசிநாள். இந்த கல்லூரியில், தொழில்நுட்பவியல் இளையர் மரபுக் கட்டிட கலைப் பட்டப்படிப்பில் (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலை பட்டப்படிப்பில் கல் சிற்பம் பிரிவில் 15 இடங்கள், உலோகச் சிற்பம் பிரிவில் 5 இடங்கள், மரச்சிற்பம் பிரிவில் 15 இடங்கள், சுதைச்சிற்பம் பிரிவில் 15 இடங்களும், கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்பில் 10 இடங்களும் உள்ளன.

இளையர் மரபுக் கட்டிடக்கலைப் பட்டப்படிப்புக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலைப் பட்டப்படிப்பு மற்றும் கவின்கலை இளையர் மரபு ஓவியம் மற்றும் வண்ணம் பட்டப்படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறையை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இக்கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அறிய https://www.artandculture.tn.gov.in/ எனும் இணையதளத்தை பார்க்கலாம் அல்லது “முதல்வர், அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, மாமல்லபுரம் – 603104” எனும் முகவரிக்கு நேரில் சென்று தகவல்களை பெறலாம் அல்லது 044-27442261 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

இதுகுறித்து மாமல்லபுரம், அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது: சிற்பக் கலையில் மாணவர்கள் பலரும் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு தான் இந்த கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது 80 இடங்கள் உள்ளன. விண்ணப்ப பதிவு இந்த மாத இறுதியுடன் நிறைவடைய உள்ளது. தற்போது வரை 70 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இங்கு படிக்கும் பலருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அறநிலையத்துறையின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்களில் உதவி மண்டல ஸ்தபதி பணிகள் இந்த மாணவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த பணியில் இங்கு படித்த பழைய மாணவர்கள் 11 பேர் பணிபுரிகின்றனர். பெண்களும் பல பிரிவில் பணிபுரிகின்றனர். அரசு வேலையை விரும்பாத பலரும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் பணிபுரிகின்றனர். நானும் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் அதிக கலைகளை கற்றுத்தரும் போதிமரமான இந்த கல்லூரியை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. அதுமட்டுமல்ல மாணவர்களுக்கான பயிற்சி பொருட்கள் அனைத்தையுமே அரசே வழங்குகிறது. 10 ஆயிரம் நூல்களை கொண்ட சிறந்த நூலகமும் இங்கு உள்ளது. கட்டிடம் மற்றும் ஓவியம் ஆகிய 2 பிரிவுகளில் 11 மாணவிகளும் பயின்று வருகின்றனர் என்றார். கோயில்களில் உதவி மண்டல ஸ்தபதி பணிகள் இந்த மாணவர்களுக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

The post அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்ப கலை கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் அதிக கலைகளை கற்கலாம்: மாமல்லபுரம் கல்லூரி முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: