விவசாயிகளின் போராட்டம் வாபஸ்

 

திருச்செங்கோடு, ஜூன் 11: திருச்செங்கோடு அருகே விவசாயிகள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், இளையாம்பாளையம் பகுதிகளில், சட்ட விதிகளுக்கு மாறாக 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. இதனை தடை செய்ய வேண்டும் என்று, கடந்த 3 வருடங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். ஜனவரி மாதம் குத்தகை காலம் முடிவடைந்ததால், அனைத்து குவாரிகளும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இக்குவாரிகளில் மழை நீர்தேங்கி உள்ளதால், இதனை கல்குவாரி உரிமையாளர்கள் மோட்டார் வைத்து உறிஞ்சுவதாக, கடந்த 3 மாதத்திற்கு முன் விஏஓ.விடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ராமசாமி என்பவரது தோட்டத்தில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, டிஎஸ்பி (பொ) முத்துகிருஷ்ணன், தாசில்தார் பச்சைமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை பிடிஓ உட்பட அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றினர். இதனால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

The post விவசாயிகளின் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Related Stories: