9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கிய மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் புதிதாக ரூ.100 லட்சம் கோடி கடன் ஒன்றிய அரசால் வாங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி கடந்த 30ம் தேதி 9 ஆண்டுகளை நிறைவு செய்தது. இது தொடர்பாக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் ஒரு மாத நிகழ்ச்சிகளை பாஜ நடத்தி வருகிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா நாட்டே கூறியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் கடன் ரூ.155 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி பதவியேற்பதற்கு முன், 2014ம் ஆண்டு வரை, 14 பிரதமர்களின் ஆட்சியில், 67 ஆண்டுகளாக நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. மோடி பிரதமரான பின் அவரது ஆட்சியில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.1.20 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த கடனுக்காக ஆண்டுக்கு ரூ.11 லட்சம் கோடி வட்டி செலுத்தப்படுகிறது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான கடன் 84 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆட்சிகளில் இது 64.5 சதவீதமாக மட்டுமே இருந்தது.

மோடி அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையை சீரழித்துவிட்டது. இதன் காரணமாக, மிகப் பெரிய அளவில் வேலையின்மை உருவாகி உள்ளது. அத்துடன் பணவீக்கமும் அதிகரித்திருக்கிறது. ரூ.155 லட்சம் கோடி கடன் என்பது ஆபத்தான அளவாகும். நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவு நாட்டிற்கு கடன் சுமையை மோடி அரசு உயர்த்தி இருக்கிறது.‘’நாட்டில் உள்ள சொத்து மதிப்பில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்கும் 50% மக்கள் ஜிஎஸ்டி வரி வசூலில் 64 சதவீதத்தை செலுத்தி உள்ளனர். அதே நேரம், 80% சொத்துக்களை வைத்திருக்கும் 10 சதவீத பெரும் பணக்காரர்கள் ஜிஎஸ்டி வரி வசூலில் 3 சதவீதம் மட்டுமே செலுத்தி உள்ளனர் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதில் நடந்துள்ள தவறுகள் மிகப் பெரிய அளவிலானது. இவ்வாறு அவர் கூறினார்.

The post 9 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கிய மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: