தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: காதலனுடன் மனைவி கைது

நாமகிரிப்பேட்டை: தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி, காதலனுடன் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா(28). 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கீர்த்தனாவுக்கும், சின்னவரகூர் கோம்பையைச் சேர்ந்த கதிரேசனுக்கும் (27) கடந்த ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது. இது மோகன்ராஜூக்கு தெரியவந்ததால், மனைவியை கண்டித்துள்ளார். அவர் கண்டுகொள்ளவில்லை. தகராறு முற்றவே, தகாத உறவுக்கு இடையூறாக உள்ள கணவனை தீர்த்துக் கட்டுவதற்கு, கீர்த்தனா முடிவு செய்தார். இதுகுறித்து காதலன் கதிரேசனிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜின் நண்பர்கள் சிலர், அவரை சந்திப்பதற்கு வந்துள்ளனர். அப்போது, மோகன்ராஜ் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆயில்பட்டி போலீசார் மர்மச்சாவு என்ற பிரிவில் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மோகன்ராஜ் மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசாரின் பிடி இறுகுவதை அறிந்த கீர்த்தனா, காதலன் கதிரேசன் ஆகியோர், ஊனந்தாங்கல் விஏஓவிடம் நேற்று மதியம் சரணடைந்தனர். விசாரணையில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய திட்டமிட்ட கீர்த்தனா, கடந்த 6ம் தேதி இரவு வேலை முடிந்து வந்த கணவனுக்கு, சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், காதலனுக்கு போன் செய்து வரவழைத்து மோகன்ராஜை அருகில் உள்ள தோட்டத்திற்கு இழுத்துச் சென்று போட்டுள்ளனர். பின்னர், அங்குள்ள மின்கம்பியில் கொக்கி போட்டு மின்இணைப்பு கொடுத்து, அதனை மோகன்ராஜ் மீது பாய்ச்சியுள்ளனர். இதில் மின்சாரம் பாய்ந்த அவர், மயங்கிய நிலையிலேயே உயிரிழந்துள்ளார். உடலை அங்கேயே போட்டு விட்டு, எதுவும் தெரியாதது போல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

The post தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து மின்சாரம் பாய்ச்சி கணவன் கொலை: காதலனுடன் மனைவி கைது appeared first on Dinakaran.

Related Stories: