கலவரம் தொடர்ந்து நீடிப்பு மணிப்பூர், அசாம் முதல்வர்கள் திடீர் ஆலோசனை

இம்பால்: மணிப்பூரில் கலவரம் நீடிக்கும் நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று திடீரென இம்பால் சென்று மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்கை சந்தித்து பேசினார். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்று வரை நீடிக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இப்போது வரை 272 முகாம்களில் 37,450 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றும் நிலைமை சீராகவில்லை. இந்தநிலையில் மணிப்பூர் அருகில் உள்ள அசாம் மாநில முதல்வரும், வடகிழக்கு மாநிலங்களின் பா.ஜ பொறுப்பாளராக கருதப்படுகிறவருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று காலை திடீரென கவுகாத்தியில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார்.

அங்கு மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த தகவலை அவர் கூறியதாக கூறப்படுகிறது. எதற்காக அவர் தனியாக வந்து அவசரமாக சந்தித்தார் என்று வெளிப்படையாக கூறவில்லை. இருப்பினும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார். அதோடு இங்கு உள்ள நிலைமையை பிரதமர் மோடிக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார் என்று தெரிவித்தார்.

The post கலவரம் தொடர்ந்து நீடிப்பு மணிப்பூர், அசாம் முதல்வர்கள் திடீர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: