முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு ரூ89,047 கோடி ஒதுக்கியது ஏன்?.. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்ப்பா?

புதுடெல்லி: முடக்கப்பட்டதாக கூறப்பட்ட ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு திடீரென ரூ89,047 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாட்டின் பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு கடந்த சில நாட்களுக்கு ரூ.89,047 கோடி மதிப்பிலான தொகுப்பை அறிவித்தது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை, மூன்று தவணை முறைகளில் பிஎஸ்என்எல்லின் வளர்ச்சிக்காக ரூ.3.22 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க ‘விஆர்எஸ்’ என்ற பெயரில் ஊழியர்களை வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடாமல், பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஒன்றிய அரசு முடக்கியதாக கூறப்படும் நிலையில், தற்போதைய நிதி ஒதுக்கீடு அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கடந்த 2016ல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தின. இப்போது அவை 5ஜி சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், பிஎஸ்என்எல் இன்னும் முழுமையாக 4ஜி சேவையை தொடங்கவில்லை. இந்த எண்ணிக்கையில் தனியார் நெட்வொர்க்குகளை விட பிஎஸ்என்எல் பல ஆண்டுகள் பின்தங்கி உள்ளது.

ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கையால், பிஎஸ்என்எல் நிறுவனம் வருமானம் இன்றி கடனில் சிக்கித் தவிப்பதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தகவல் தொடர்பு போட்டியில் பிஎஸ்என்எல் நிறுவனம் பின்தங்கியிருந்தாலும், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களை விட கிராமப்புறங்களில் பிராட்பேண்ட், ஆப்டிகல் பைபர் நெட்வொர்க், இன்டர்நெட் புரோட்டோகால், இன்டர்நெட் டெலிவிஷன் ஆகிய துறைகளில் பிஎஸ்என்எல் முன்னிலை வகிக்கிறது. மேலும், இந்நிறுவனம் நாடு முழுவதும் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ளது. சுமார் 8 லட்சம் கிலோமீட்டர் ஓ.எப்.சி, 66 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்களை கொண்டு உள்ளன.

இதுவரை கவரேஜ் இல்லாத கிராமப்புறங்களுக்கு 4ஜி சேவையை வழங்க தனியார் நிறுவனங்கள் பல லட்சம் கோடிகளை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் சிஸ்டம் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனமானது, அவ்வளவு செலவு செய்ய வேண்டியதில்லை. எனவேதான் இந்த சேவைகளை மேலும் அதிகரிக்க தற்போது ரூ.89,047 கோடி மதிப்பிலான தொகுப்பை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல்லின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, அதனை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைக்க திட்டமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post முடக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஒன்றிய அரசின் ‘பிஎஸ்என்எல்’ நிறுவனத்திற்கு ரூ89,047 கோடி ஒதுக்கியது ஏன்?.. உள்கட்டமைப்பை மேம்படுத்தி தனியாருக்கு தாரைவார்ப்பா? appeared first on Dinakaran.

Related Stories: