கிச்சன் டிப்ஸ்

*அப்பளம், வடாம் போன்றவை வைத்திருக்கும் டப்பாவில் சிறிது பெருங்காயத்தைப் போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
*பயறு வகைகளை வாங்கியதும், அவற்றை வெறும் வாணலியில் போட்டு, லேசாக சூடாக்க வேண்டும். அதன்பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் பூச்சி பிடிக்காது.
*மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு சற்றுப் புரட்டி எடுத்துவிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
*மோர்க்குழம்பு வைக்கும்போது அரைநெல்லிக்காய்களை விதை நீக்கிவிட்டு அரைத்துப் போட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
* துவையல் அரைக்கும்போது, மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைக்கலாம். கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது மிளகு. ருசியும் வித்தியாசமாக இருக்கும்.
* பருப்பு ரசத்துக்கு இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போட்டால், அதன் சுவை சூப்பராக இருக்கும்.– எம்.நிர்மலா, புதுச்சேரி.
* பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால் கெட்டியாகிவிடும்.
* சிப்ஸ் செய்யும்போது உருளைக்கிழங்கை சீவி அதை கடலைமாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்தபின் பொரித்தால் நன்றாக இருக்கும்.
* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும்போது பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சைச்சாறு சேர்த்தால் பாகு முறியாது.
* புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால் புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.
* தேங்காய் பர்ஃபி செய்யும்போது சிறிது கடலைமாவு சேர்த்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
*பிரியாணி செய்யும்போது தேங்காய் பாலுக்குப் பதிலாக கட்டித் தயிர்விட்டு செய்தால் பிரியாணி உதிரியாக இருக்கும்.– எல். உமா மகேஸ்வரி, வாணியம்பாடி.
* எந்த கலவை சாதம் செய்தாலும், பாதி வேர்க்கடலை பாதி முந்திரியை பொரித்து சேர்த்தால் கலவை சாதம் சுவை கூடுதலாக இருக்கும்.
*சேனைக்கிழங்கை நறுக்கியவுடன் கரைத்த புளித் தண்ணீரைவிட்டால் அதன் காரல் குறையும். – பி.பரத், கோவிலாம்பூண்டி.
* குடை மிளகாயைப் பொடியாக நறுக்கி, கால் கிலோவிற்கு ஒரு தேக்கரண்டி வீதம் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து, அதில் நறுக்கிய குடை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும். பிறகு, தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி இறக்கவும். குடை மிளகாய் பொரியல் தயார்.
* பொடி அடைத்துச் செய்யும் ஸ்டஃப்டு கறியை கத்திரிக்காயில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அதேபோல புடலங்காயை நறுக்கியும் செய்யலாம். சுவையாக இருக்கும்.
* தேங்காயைப் பல்லு பல்லாக கீறி எண்ணெயில் வதக்கி, பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும்போது கசப்பு தெரியாது.
* பாகற்காயை சிறுவில்லைகளாக வெட்டி, விதைகளை நீக்கிவிட்டு, உப்பு, கீறிய பச்சைமிளகாய், பூண்டு, எலுமிச்சை சாறுவிட்டு கலந்து ஒரு வாரம் வெயிலில் காய வைத்து எடுக்கவும். காய் மூழ்கும் வரை எலுமிச்சைச் சாறு விடவும், இதில் கசப்பும் குறைந்திருக்கும். சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.
*வடகத்துக்கு அரைக்கும் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் கலந்த கார விழுதை மாங்காய் ஊறுகாய் தாளிக்கும்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* தேங்காயுடன் கசகசாவிற்குப் பதில் ஒரு தேக்கரண்டி பொட்டுக்கடலை வைத்து அரைத்து குழம்பில் சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.
* குருமா செய்யும்போது வேக வைத்த உருளைக்கிழங்கை நறுக்கிப் போடாமல் கையால் பிசைந்து சிறிதளவு உதிர்த்துப் போட்டால் குருமா கூடுதல் சுவையாக இருக்கும்.
* திராட்சை புளிப்பாக இருந்தால், ஒரு தேக்கரண்டி உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் சிறிது வறுத்துக் கொள்ளவும். திராட்சையில் விதைகளை நீக்கிவிட்டு வதக்கி, ஆறியபிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்தால் திராட்சை துவையல் தயார். பூரிக்கும் இதை தொட்டுக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
* இள நுங்குகளை உரித்துப்போட்டு, சுண்டக் காய்ச்சிய பாலைவிட்டு, சர்க்கரையும் ஏலப்பொடியும் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
* எலுமிச்சைச் சாற்றில் உப்பு, பச்சை மிளகாய் கலந்து வெயிலில் காய வைத்து எடுத்து, அதை வறுத்து தயிர் சாதத்துடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

– அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

The post கிச்சன் டிப்ஸ் appeared first on Dinakaran.

Related Stories: