பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் 2 பேர் கைது..!!

சென்னை: அதிக வட்டி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நொளம்பூர் பாரதி சாலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்கநகை சேமிப்பு, தங்க நகைக்கடன் மற்றும் 1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.

இதனை நம்பி பொதுமக்கள் லட்சக்கணக்கில் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அதுமட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பிரம்மாண்டமான திரைப்படம் எடுக்கப்போவதாக கூறி பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர். மேலும் முதலீடு பணத்தில் ஏ.ஆர் மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக்கடையின் கிளைகள் என தொழிலை விரிவுபடுத்தி சில மாதங்கள் வட்டியை வாரி கொடுத்து வந்த இந்நிறுவனம் பின்னர் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

மேலும் இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் நகைக்கடை, ஏ.ஆர் மால் என முற்றுகையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய ஏஜென்டுகள் மீது வழக்குபதிவு செய்து நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தி ஏ.ஆர் மால் மற்றும் நகைக்கடைக்கு சீல் வைத்தனர்.

இவ்வழக்கில் முக்கிய நபர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் தலைமறைவானதால் அவர்களுக்கு எதிராக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது. அத்துடன் ஏஜென்ட் பிரியா என்பவரை மட்டும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர் ஆல்வின், ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மோசடி வழக்கில் பல மாதங்களாக இருவரும் வெளிநாட்டில் பதுங்கி இருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து ஆல்வின், ராபின் ஆகியோரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரையும் நொளம்பூரில் அவர்களின் நகைக்கடை, மாலுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஏ.ஆர்.டி ஜூவல்லரி உரிமையாளர்கள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: