காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக குஜராத், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக குஜராத், புதுவை மாநிலங்களுக்கும், மும்பை பகுதி தலைவரையும் மாற்றி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடவடிக்கை எடுத்துள்ளார். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால் அங்கு தலைவராக இருந்த ஜெகதீஷ் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அவருக்கு பதில் குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக சக்திசிங் கோகில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதுவை காங்கிரஸ் தலைவராக இருந்து ஏ.வி. சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் வைத்திலிங்கம் எம்பி புதிய புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதே போல் அரியானா மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக தீபக் பாபாரிய நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை மண்டல காங்கிரஸ் தலைவராக இருந்த பாய் ஜெகதீப் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பெண் எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* கர்நாடக பொறுப்பாளர்தெலங்கானாவுக்கு மாற்றம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது உத்தரவில் மன்சூர் அலிகானை அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமித்து உள்ளார். மேலும் அவரை தெலங்கானா காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளராகவும் நியமித்து உள்ளார். அதே போல் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.சி விஷ்ணுநாத், கர்நாடகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இப்போது தெலுங்கானாவின் பொறுப்பாளராக இணைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு தெலங்கானா பொறுப்பில் இருந்த என்.எஸ். போசராஜு, நதீம் ஜாவேத் ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The post காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: