நாடு முழுவதும் 10 கோடி நீரிழிவு நோயாளிகள்: 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் 32 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை கடந்த 2008ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலும் நடத்திய ஆராய்ச்சி முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, உடல் பருமன் உள்ளிட்ட தொற்றா நோய்களும் அவற்றுக்கான முக்கிய காரணிகளும் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவில், நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 16.4% பேருக்கும், கிராமப்புறங்களில் 8.9% பேருக்கும் நீரிழிவு நோய் உள்ளது. கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நோய்க்கு முந்தைய நிலையில், அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை. நீரிழிவு நோய் பாதிப்பதற்கு முந்தைய கட்டத்தில் நாடு முழுவதும் 15.3 சதவீதம் பேர் உள்ளனர். இதில் கிராமப்புறங்கள் 15.2 சதவீதமாகவும் நகர்ப்புறங்கள் 15.4 சதவீதமாகவும் உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, கோவா மற்றும் சண்டிகரில் நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும் போது நீரிழிவு நோய்க்கு முந்தைய கட்டத்தில் இருப்போரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதுவே உபி போன்ற மாநிலங்களில் அதிகமாக உள்ளது. இதே போல, மாரடைப்பு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடிய உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் உடல் பருமன் போன்ற பிற ஆபத்து காரணிகளும் அதிகரித்துள்ளன.

ஆய்வு முடிவின் படி, மொத்த மக்கள்தொகையில் குறைந்தது 35.5% பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 81.2% பேர் அசாதாரண கொலஸ்ட்ரால் அளவு, 28.6% பேர் உடல் பருமன், 39.5% பேர் வயிற்றுப் பருமன் கொண்டவர்களாக உள்ளன. எனவே, எதிர்காலத்தில் அதிகப்படியான நீரிழிவு நோயாளிகள் உருவாகக் கூடிய அபாயம் இருப்பதால் அவற்றை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தமிழ்நாட்டில் 1 கோடி பேர்
தமிழ்நாட்டில் 14.4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 1 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே போல் 80 லட்சம் பேர் அதாவது 10.2 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தைய கட்டத்தில் உள்ளனர்.

* 4 ஆண்டில் 44% அதிகரிப்பு
கடந்த 2019ம் ஆண்டு நாட்டில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை 7 கோடியாக இருந்தது. இதுவே அடுத்த 4 ஆண்டில் 10 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 4 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

The post நாடு முழுவதும் 10 கோடி நீரிழிவு நோயாளிகள்: 36% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: