புதுடெல்லி: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர், தெலங்கானா மற்றும் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்க உள்ளன. மேலும், ராகுல் காந்தியின் வயநாடு (கேரளா) தொகுதி, புனே, சந்திராபூர் (மகாராஷ்டிரா), காஜிபூர் (உத்தரப்பிரதேசம்) மற்றும் அம்பாலா (அரியானா) ஆகிய மக்களவை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தேர்தல்களை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் முதல் நிலை சோதனையை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக வயநாடு தொகுதியில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போது தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதல் நிலை சோதனையின் ஒரு பகுதியே மாதிரி தேர்தல். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் சோதனை செய்யப்படும். அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பழுதடைந்த இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் தரப்பட்டு சரி செய்யவோ மற்றும் மாற்று இயந்திரம் பெறவோ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
The post வாக்கு இயந்திரங்கள் சோதனை மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியது appeared first on Dinakaran.