புகையிலை பொருட்கள் விற்பனையாளருக்கு அபராதம் வேலூர் கொசப்பேட்டை பகுதியில்

வேலூர், ஜூன் 10: வேலூரில் புகையிலை பொருட்கள் விற்பனையாளருக்கு மாவட்ட புகையிலை தடுப்பு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் அபராதம் விதித்தனர். வேலூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் சில்லரையில் பீடி, சிகரெட் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில்லரையில் பீடி, சிகரெட் விற்பனை மற்றும் பொது இடங்களில் புகைபிடிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. அதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் தொடர்ந்து வருகிறது. இதனை மாநகராட்சி மட்டுமின்றி மாவட்ட அளவிலான புகையிலை தடுப்பு குழுவினரும் அவ்வபோது ஆய்வு செய்து விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட புகையிலை தடுப்பு ஆய்வாளர் ஜெய தலைமையிலான குழுவினர் வேலூர் ஜிபிஎச் ரோடு, கொசத்தெரு, தென்னமரத்தெரு, ரெட்டியப்ப முதலி தெரு பகுதிகளில் உள்ள பங்க் கடைகள், டீக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்கடைகளில் சில்லரையில் சிகரெட், பீடி விற்றதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதும் தெரிய வந்தது. மேலும் புகையிலை தொடர்பான எச்சரிக்கை வாசகங்கள் வைக்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதே தவறுகளில் ஈடுபட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

The post புகையிலை பொருட்கள் விற்பனையாளருக்கு அபராதம் வேலூர் கொசப்பேட்டை பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: