திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி ₹20 கோடியில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி * அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு * தீபத்திருவிழாவுக்குள் முடிக்க உத்தரவு

திருவண்ணாமலை, ஜூன் 10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தீபத்திருவிழாவுக்குள் பணிகளை விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார். உலக பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரான திருவண்ணாமலையில், அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாட வீதியை கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி, சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ₹20 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதையொட்டி, மாட வீதியின் இருபுறமும் நிரந்தர வடிகால் வசதிகள் அமைத்தல், மின் கம்பங்களை மாற்றி, புதைவட மின்தடங்களாக மாற்றும் பணிகள் முழு வீச்சில் நடந்துள்ளன.

அதன்தொடர்ச்சியாக, அதி நவீன தரத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அதையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மாடவீதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர் தெரிவித்ததாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பிரசாரத்தின்போது, திருப்பதி திருமலைக்கு இணையாக திருவண்ணாமலை மாட வீதியை கான்கிரீட் சாலையாக மாற்றப்படும் என உறுதியளித்தார். ஆட்சிக்கு வந்ததும், அதற்காக ₹15 கோடி நிதி ஒதுக்கினார். மேலும், மாட வீதியில் உள்ள மின் கம்பிகளை எல்லாம் புதைவட மின்வழித்தடமாக மாற்ற ₹5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், நகராட்சி குடிநீர் இணைப்புகளை எல்லாம் மாற்றி அமைக்க ₹3.47 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மாட வீதியை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணி, வரும் தீபத்திருவிழாவுக்குள் விரைந்து முடிக்கப்படும். அதற்காக, வாரத்துக்கு ஒருமுறை கலெக்டர் ஆய்வு நடத்தி வருகிறார்.

திட்டமிட்டபடி பணிகள் நடக்கிறதா என தற்போது நேரில் ஆய்வு செய்து, விரைவுபடுத்தியிருக்கிறேன். பேகோபுர வீதியில் இருந்து மழைநீர் கோயிலுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் விரைந்து நடக்கிறது. கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியில், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் செயல்படவில்லை. பிரதமர் அறிவித்த திட்டமே இந்த நிலையில் இருக்கிறது. அதேபோல், திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக ஜோலார்பேட்டையை இணைக்கும் புதிய ரயில் பாதை திட்டம், திண்டிவனத்தில் இருந்து ஆரணி வழியாக நகரி செல்லும் புதிய ரயில்பாதை திட்டம் நடைபெறவில்லை.

கிளின் இந்தியா எனும் திட்டத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. திருவண்ணாமலையில் தூய்மை அருணை அமைப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து நாங்கள் தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகிறோம். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்தியது கலைஞரின் திமுக ஆட்சிதான். திருவண்ணாமலை-சென்னைக்கு தினசரி நேரடி ரயில் இயக்க வேண்டும் எனு தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிேறன். எம்பி அண்ணாதுரையும் பேசி வருகிறார். ஆனால், ஒன்றிய அரசு செய்யவில்லை.

தமிழ்நாடு ஆளுநருக்கும், திமுகவுக்கும் எந்த தனிப்பட விரோதமும் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் எதையும் மென்மையாக சொல்ல வேண்டும் என நினைப்பவர். ஆனால், ஆளுநர் தனி ராஜாங்கம் நடத்த வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதற்கு சட்டம் இடம்தாராது. ஆளுநர் ஒன்றிய அரசின் முகவர். மாநில அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது அவருக்கான செயல் இல்லை.
பட்டமளிப்பு விழாக்களை ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.

பட்டதாரிகள் மீது ஆளுநருக்கு அக்கறையில்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் மாநிலமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே,கம்பன், எம்எல்ஏ வசந்தம்கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சித் தலைவர் நிர்மலாவேல்மாறன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதி ₹20 கோடியில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி * அமைச்சர் எ.வ.வேலு நேரடி ஆய்வு * தீபத்திருவிழாவுக்குள் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: