மக்களின் அரசு

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை, தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது, அதற்குமேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட் வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது, இதில், நிலைக்கட்டணமும் அடங்கும். 100 யூனிட்டுக்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு ரூ.35, 200 யூனிட்டுக்கு ரூ.170, 210 யூனிட்டுக்கு ரூ.260, 290 யூனிட்டுக்கு ரூ.500, 390 யூனிட்டுக்கு ரூ.800, 500 யூனிட்டுக்கு ரூ.1,130, 510 யூனிட்டுக்கு ரூ.1,846, 600 யூனிட்டுக்கு ரூ.2,440, 700 யூனிட்டுக்கு ரூ.3,100, 800 யூனிட்டுக்கு ரூ.3,760, 1,000 யூனிட்டுக்கு ரூ.5080, 1,200 யூனிட்டுக்கு ரூ.6,400 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடி காரணமாக, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதிநிலை மோசமடைந்தது. மின்வாரியத்துக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டது. மேலும், ஒன்றிய அரசின் 9.11.2021 தேதியிட்ட ஆணையின்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, மின்கட்டணத்தை உயர்த்தி, நுகர்வோரிடமிருந்து மாதந்தோறும் பெறவேண்டும் எனவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவை ஏற்று, வாரியத்தின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 09.09.2022 அன்று, 2022-2023 முதல் 2026-2027 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின்கட்டண வகையில் (MYT) வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்வு முறையை அறிவித்தது. இந்த நடைமுறையை ஆய்வுசெய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டு, 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இதுவும் கூடாது என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த 2.18 சதவீத கட்டண உயர்வை தமிழக அரசே மானியமாக வழங்கும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பால், வீட்டு மின்இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும். இலவச மின்சார சலுகை எப்போதும்போல் தொடரும். வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிக குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும். மின்கட்டண உயர்வில் இருந்து, ஏழை மக்களை பாதுகாத்த தமிழக முதல்வரின் இந்த பாங்கு, அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இது மக்களுக்கான அரசு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

The post மக்களின் அரசு appeared first on Dinakaran.

Related Stories: