ரூ.90 கோடியில் 4773.13 கி.மீ. நீளம் தூர்வாரும் பணி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெற்றார்

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், டெல்டாவில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். டெல்டா மாவட்டங் களில் தற்போது குறுவை சாகுபடிக்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடுகிறார். இந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்துக்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் நடக்கிறது. இந்த பணிகளை பார்வையிட தஞ்சாவூர் வந்த முதல்வர், அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார். அங்கு, நேற்று காலை 8.30 மணிக்கு நீர்வளத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில்அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி பழனிமாணிக்கம், மமக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் பற்றி விரிவாக விளக்கினார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் 8.45 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் அருகே ஆலக்குடி புறப்பட்டார். ஆலக்குடி சென்ற முதல்வர், வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று அங்கு திரண்டு நின்ற விவசாயிகள், பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றார். பின்னர் அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதில், தூர்வாரும் முன்பு வாய்க்கால் இருந்த நிலை, தூர்வாரிய பின்னர் உள்ள நிலை, இதன் மூலம் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பவை புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்பின் முதலை முத்துவாரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 3.50 கி.மீ தூரம் தூர்வாரும் பணி நடைபெறுவதை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் அங்கிருந்து முதல்வர் பூதலூர் அருகேயுள்ள விண்ணமங்கலம் புறப்பட்டார். அங்குள்ள ‘இ’ பிரிவு வாய்க்காலின் வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2.50 கி.மீ தூரம் தூர்வாரும் பணியை பார்வைட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செங்கரையூருக்கு முதல்வர் வந்தார்.

அங்குள்ள கூழையாற்றில் ரூ.194.80 லட்சம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ தூரம் தூர்வாரும் பணிகளையும், லால்குடி அருகே புள்ளம்பாடியில் நந்தியாற்றில் ரூ.194.25 லட்சம் மதிப்பீட்டில் 5.90 கி.மீ தூரம் தூர் வாரும் பணிகளையும் பார்வையிட்டார். புள்ளம்பாடியில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சிக்கு வந்த முதல்வர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முதல்வரின் நேற்றைய ஆய்வின்போது தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் வெயில் கடுமையாக இருந்தது. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். முதல்வரின் வருகையையொட்டி திருச்சி,தஞ்சாவூர் மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ரூ.90 கோடியில் 4773.13 கி.மீ. நீளம் தூர்வாரும் பணி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: விவசாயிகளிடம் கோரிக்கை மனு பெற்றார் appeared first on Dinakaran.

Related Stories: